×

விராலிமலை அருகே பேராம்பூர் பெரியகுளத்தில் உடைப்பு: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே பேராம்பூர் பெரியகுளத்தின் மதகு பகுதி உடைந்துள்ளது. பேராம்பூர் பெரியகுளம் சுமார் 3 ஏக்கர் நீளமும் 10 ஏக்கர் சுற்றளவும் கொண்ட பெரிய குளமாகும். விராலிமலை பகுதியில் இந்த குளம் தான் பெரிய குளமாக திகழ்கிறது. சுமார் 500 ஏக்கர் பரப்பளவிலான இந்த குளத்தை நம்பி 1000 ஏக்கர் பாசனம் நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த வழக்கத்தை விட அதிக பருவமழை பெய்ததால் இந்த குளம் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே நிரம்பிவிட்டது. இந்த குளத்தில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட ஒரு அணைக்கட்டு உள்ளது. இந்த அணைக்கட்டு நீண்ட காலமாக பராமரிக்காததால் அது சிதிலமடைந்து அதிலிருந்து தண்ணீர் வெளியேற தொடங்கியது. இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கும், பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்திருந்தனர்.

அவர்கள் அணையை ஆய்வு செய்து அணை உறுதித்தன்மை இல்லை என்று ஏற்கனவே கூறி சென்றனர். ஆனால் குளத்தில் முழுமையாக தண்ணீர் நிரம்பி இருப்பதால் பராமரிப்பு பணி செய்ய முடியாத நிலை இருந்தது. புதுக்கோட்டை மாவட்டத்திற்கான கண்காணிப்பு அலுவலர் நேரில் வந்து இந்த அணையை நேரில் வந்து கடந்த 15 நாட்களுக்கு முன்னதாக ஆய்வு செய்துவிட்டு சென்றிருந்தார். தற்போது உள்ள சூழலில் இந்த அணையை புதிதாக கட்டுவதற்கோ பராமரிப்பதற்கோ இயலாத நிலையில் இந்த மழை காலம் முடியட்டும் என்று காத்திருந்தனர். இந்த நிலையில் அணையின் மதகு பகுதியில் உடைப்பு ஏற்பட்டு மதகு பகுதி மட்டுமின்றி மேலேயுள்ள சுவர் இடிந்து விழுந்து தண்ணீர் வெளியேறி வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால் இன்னும் ஒருசில நாட்களில் இந்த அணை முழுமையாக உடைய வாய்ப்புள்ளது. அப்படி முழுமையாக அணைக்கட்டு உடையும் பட்சத்தில் அந்த பகுதியில் உள்ள விளைநிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுவதற்கு வாய்ப்புள்ளது.

இதனால் தடுக்க தற்காலிகமாக மணல் மூட்டைகளை கொண்டோ அல்லது அணை உடையாமல் இருப்பதற்கு பொதுப்பணி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த ஆண்டு பெய்த மழையால் விராலிமலை, அன்னவாசல், இலுப்பூர் பகுதிகளில் உள்ள அனைத்து குளங்களும் நிரம்பியுள்ளது. 12 ஆண்டுகளுக்கு பிறகு அணை நிரம்பியுள்ள நிலையில் நீண்ட காலமாக பராமரிக்காமல் இருந்ததன் விளைவு தான் இந்த அணையின் உடைப்பு காரணமாக உள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட அணையை அதன்பின்பு பொதுப்பணித்துறை அதிகாரிகள் முறையாக பராமரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த குளத்தில் தண்ணீர் முழுமையாக நிரம்பியுள்ளது. இதில் விபத்து ஏற்படும் போது பெரிய ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. அதற்கு முன்னதாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து தற்காலிகமாக இந்த உடைப்பை சரிசெய்து மழைக்காலம் முடிந்த பின்பு புதிய அணை கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Perampur ,Viralimai , Pudukkottai
× RELATED சம்பளம் கேட்ட ஊழியருக்கு அடி: உரிமையாளர் உள்பட 2 பேர் கைது