×

நடிகர் அஜித் வீட்டு முன் தீக்குளிக்க முயன்ற பெண் கைது: போலீசார் விசாரணை

சென்னை: நடிகர் அஜித்தை போட்டோ எடுத்த தனியார் மருத்துவமனை பெண் ஊழியர், நடிகரின் வீட்டின் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை வளசரவாக்கம் சவுத்ரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பர்சானா (26). இவர் தேனாம்பேட்டையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில், மருத்துவர்களுக்கான ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வந்தார்.  இந்நிலையில், கடந்த மே மாதம் நடிகர் அஜித்குமார் தனது மனைவி ஷாலினியுடன் அந்த மருத்துவமனைக்கு வந்தார். அப்போது, ஆர்வம் மிகுதியால், பர்சானா அதை தன் செல்போனில் படம் பிடித்து, வாட்ஸ்-அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அதைக் கண்ட மருத்துவமனை பாதுகாப்பு அதிகாரிகள் பர்சானாவிடமிருந்து, அவரது செல்போனை பிடுங்கினர். பின்னர், நிர்வாகத்தின் தனியுரிமை கொள்கை அடிப்படையில் சிகிச்சைக்காக வருபவர்களுடன் புகைப்படம் எடுப்பதும், அதை சமூக வலைதளங்களில் பரப்புவதும் தவறு எனக்கூறி, இந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிடக்கூடாது என, கடுமையாக எச்சரித்து, அவரிடம் செல்போனை தந்தனர்.இதனையடுத்து, அப்புகைப்படம் வாட்ஸ்-அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதை பார்த்த சில விஷமிகள்,  நடிகர் அஜித்துக்கு கொரோனாவா என சமூக வலைதளங்களில் வதந்தியை பரப்பினர். இது, அஜித்தின் நெருங்கிய வட்டாரம் மற்றும் திரையுலகத்தினரிடயே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது குறித்து, தகவலறிந்த மருத்துவமனை நிர்வாகம் பர்சானாவை பணியிடை நீக்கம் செய்தது. இதை கேள்விபட்ட அஜித்தின் மனைவி ஷாலினி மருத்துவமனை நிர்வாகத்திடம், பர்சானாவை வேலையில் சேர்த்துகொள்ளுமாறு பரிந்துரை செய்தார். இதனால், சமாதானம் அடைந்த மருத்துவமனை நிர்வாகம் பர்சானாவை மீண்டும் பணியில் சேர்த்து கொண்டது. இந்நிலையில், சிறிது நாட்கள் கழித்து, பர்சானா மீண்டும் பணி நீக்கம் செய்யப்பட்டார். அதுமட்டுமில்லாமல், அவர் வாங்கிய கடனுதவிகளை காரணம் காட்டி, பர்சானாவின் சான்றிதழ்களை வழங்க மருத்துவமனை நிர்வாகம் மறுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, கொரோனா ஊரடங்கு காரணமாக, வாழ்வாதாரம் இழந்த அவர், போதிய வருமானமின்றி குடும்பத்தை நடத்த முடியாமல் அவதிப்பட்டார். இதன் காரணமாக,  நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திராவை பர்சானா சந்தித்து, நடிகர் அஜித் பற்றி வதந்தி பரவியதற்கு மன்னிப்புகோரி, தனக்கு வேலை மீண்டும் கிடைக்க உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கு, சுரேஷ் சந்திரா அஜித்தை சந்திக்க ஏற்பாடு பண்ணி, வேலை கிடைக்க உதவுவதாக கூறியதாகவும், ஆனால், அவ்வாறு செய்யாமல் ஏமாற்றி வந்ததாக பர்சானா கூறினார். இதனிடையே, தன்னை பற்றி அஜித்தின் மேலாளர் யூடியூப்பில் அவதூறான வீடியோக்களை வெளியிட்டு வருவதாகவும், அதனை தடுத்து நிறுத்த வேண்டுமென கூறி, ஈஞ்சம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அஜித்தின் வீட்டிற்கு பர்சானா தனது தாயாருடன் நேற்று மாலை வந்தார். பின்னர், தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு, தீக்குளிக்க முயன்றார். தகவலறிந்த  நீலாங்கரை போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அவரிடமிருந்த மண்ணெண்ணெய் கேனை பறித்துக்கொண்டு, அவர் உடலில் தண்ணீரை ஊற்றி, தீக்குளிப்பதை தடுத்தனர். பின்னர், இருவரையும் கைது செய்து,  நீலாங்கரை காவல் நிலையம் அழைத்து சென்றனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இச்சம்பவத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

நடிகர் அஜித்  மருத்துவமனைக்கு வந்தபோது, மருத்துவமனை ஊழியரான பர்சானா அதை  தன் செல்போனில் படம் பிடித்து, வாட்ஸ்-அப், பேஸ்புக்கில் பதிவிட்டார்.  இதனால் அஜித் குறித்து வதந்தி பரவியது. இதையடுத்து பணியிலிருந்து பர்சானா நீக்கப்பட்டார்.

Tags : Ajith , Actor Ajith
× RELATED தனது ஜனநாயக கடமையை ஆற்ற முதல் ஆளாக வருகை தந்த நடிகர் அஜித்!