×

ஆள்மாறாட்டத்தை தடுக்கும் வகையில் தமிழக சார்பதிவாளர் அலுவலகங்களில் கருவிழி பதிவு முறை விரைவில் அமல்: பதிவு மாவட்டத்துக்கு ஒரு அலுவலகம் தேர்வு

சென்னை: ஆள்மாறாட்டத்தை தடுக்கும் வகையில், மாநிலம் முழுவதும் 53 சார் பதிவாளர் அலுவலகங்களில், ஆதார் அடிப்படையில் பயோமெட்ரிக் முறையில் விரல், ரேகை, கருவிழியை பதிவு செய்து, பத்திரங்கள் பதிவு செய்யப்படுகிறது. இந்த திட்டம் விரைவில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களில் நடைமுறைக்கு வருகிறது என்று பதிவுத்துறை உயர்அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்களில் கடந்த 2018 பிப்ரவரி முதல் ஆன்லைன் மூலம் வீடு, விளைநிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த அலுவலகங்களில் பதிவுக்கு வரும் பொதுமக்களிடம் விரல் ரேகை பதிவு செய்வது, புகைப்படங்கள்  எடுப்பது போன்ற பணிகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆனால், இந்த நடைமுறையால் ஆள் மாறாட்டம் செய்து பத்திரப்பதிவு செய்வதை தடுக்க முடியாத நிலை தான் உள்ளது. இந்த நிலையில், ஆள்மாறாட்டம் மூலம் பத்திரப்பதிவு செய்வதை தடுக்கும் வகையில், ஆதார் அட்டை எடுக்கும்போது பயன்படும் கருவிழி படம் பிடிக்கும் முறையை பதிவுத்துறை மென்பொருளில் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கைரேகை பதிவுடன், கருவிழி படம் பிடித்து பதிவு செய்யப்படுகிறது. இதனால், சம்பந்தப்பட்ட நபர்களின் கைரேகை, கருவிழியை படம் பிடிக்கும் போது, சம்பந்தப்பட்ட நபர்தானா என்பதை ஆதார் வழியாக அடையாளம் காண முடியும். இந்த திட்டம் ஆரம்பத்தில் 2 அலுவலகங்களில் சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

தொடர்ந்து, 9 அலுவலகங்களில் செயல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது 53 அலுவலகங்களில் செயல்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு பதிவு மாவட்டத்துக்கு ஒரு அலுவலகம் வீதம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த அலுவலகங்களில் ஒரு கணினிக்கு ஒரு விரல் ரேகை இயந்திரமும், ஒரு கணினிக்கு கருவிழிப்படலம் கருவி பதிவு செய்யவும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் தற்போது அந்த அலுவலகங்களில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாநிலம் முழுவதும்  அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களில் இந்த நடைமுறை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது என்று பதிவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஆள்மாறாட்டம் மூலம் பத்திரப்பதிவு செய்வதை தடுக்கும் வகையில், ஆதார் அட்டை எடுக்கும்போது பயன்படும் கருவிழி படம் பிடிக்கும் முறையை பதிவுத்துறை மென்பொருளில் சேர்க்கப்பட்டுள்ளது.


Tags : Tamil Nadu , Impersonation, Tamil Nadu Delegate, Office,
× RELATED ரேசன் கடைகளில் மே மாதத்திற்கான...