டெல்லியில் சகோதரி வீட்டில் தங்கியுள்ள லாலுவை பிணைக் கைதியாக வைத்துள்ளனர்: கட்சி தலைவர்கள் மீது மகன் பரபரப்பு குற்றச்சாட்டு

பாட்னா: டெல்லியில் சகோதரி வீட்டில் தங்கியுள்ள என் தந்தை லாலுவை சிலர் பிணைக் கைதியாக வைத்துள்ளனர் என்று கட்சி தலைவர்கள் மீது அவரது மகன் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்தார்.

ராஷ்ட்ரியா ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ், ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். உடல்நலக் குறைவால் ஜாமீனில் வெளியே வந்த அவர், டெல்லியில் உள்ள அவரது மகள் மிசா பாரதியின் வீட்டில் தங்கியுள்ளார். இதற்கிடையே, பீகாரில் கட்சிப் பணியை கவனித்து வரும் லாலுவின் இளைய மகன் தேஜஸ்வி யாதவுக்கும், மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வருகிறது.

குறிப்பாக கட்சியின் மூத்த தலைவர்கள் தேஜ் பிரதாப் கருத்துக்கு ஒத்துப் போகாததால், கட்சிக்குள் கோஷ்டி பிரச்னைகள் தலை தூக்கியுள்ளன. இந்நிலையில், பாட்னாவில் நடந்த நிகழ்ச்சியின் போது தேஜ் பிரதாப் அளித்த பேட்டியில், ‘எனது தந்தை லாலு பிரசாத் யாதவுக்கு உடல்நிலை சரியில்லை; டெல்லியில் ஓய்வெடுத்து வருகிறார். இருந்தாலும், அவரை கட்சித் தலைவர்கள் சிலர் பிணைக் கைதியாக வைத்துள்ளனர். என் தந்தையிடம் பாட்னா வீட்டிற்கு வரும்படி கூறினேன். ஆனால் தந்தையை பாட்னா  அழைத்து வருவதற்கு அனுமதிக்கவில்லை. அவர்கள் எனது தந்தையை டெல்லியில் பிணைக்  கைதியாக வைத்துள்ளனர்.

சிறையில் இருந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்ட அவர்,  ஓராண்டாகியும் பாட்னா வீட்டிற்கு அவரால் வர முடியவில்லை. ராஷ்ட்ரிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவராக வேண்டும் என்ற கனவில் 5 பேர் (யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை) உள்ளனர். ‘அரசியலை கற்றுக்கொள்ளுங்கள்; வழிநடத்துங்கள்’ என்ற கருப்பொருளில் மாணவர்களுக்கான பயிற்சி பட்டறை நடத்தப்பட்டது. என்னுடைய பழைய அமைப்பான மதச்சார்பற்ற தொண்டர்கள் சங்கத்துடன் (டிஎஸ்எஸ்) இணைந்து, சமூகப் பணிகளை மேற்கொள்ள உள்ளேன்’ என்றார்.

Related Stories:

More
>