×

தமிழகத்தில் இன்று நடைபெறும் சிறப்பு முகாமில் 25 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தேசிய நலவாழ்வு குழும ஒப்பந்த பணியாளர்களுக்கு ஊதிய உயர்விற்கான ஆணை வழங்குதல் மற்றும் 2021-2022ம் ஆண்டிற்கான பல்மருத்துவ பட்ட மேற்படிப்பு தரவரிசை பட்டியல் வெளியீடு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: மருத்துவ துறையில் ஒப்பந்த பணியாளர்களாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பணி செய்து வருவோர்களுக்கு ஊதிய உயர்வாக 28 ஆயிரத்து 100 பேருக்கு ஆணை வழங்கியதால் ரூ.89 கோடி அரசிற்கு ஆண்டிற்கு கூடுதல் செலவாகிறது.

மத்திய அரசு தரவுகளின் படி தமிழகத்தில் 18 வயது நிரம்பிய தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியானவர்கள் 5 கோடியே 78 லட்சத்து 91 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்களில் 62 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அக்டோபர் இறுதிக்குள் 70 சதவீதம் பேருக்கு இலக்கு நிர்ணயம் செயய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் 24 லட்சத்து 93 ஆயிரம் பேர் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர் அவர்களில் 10 லட்சம் பேர் 2-ம் தவனை செலுத்தியுள்ளனர்.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 1 கோடியே 23 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் மூலம் சுமார் 14 லட்சம் பேர் பயனடைந்து உள்ளனர். இன்று நடைபெறும் மெகா தடுப்பூசி முகாம் மூலம் சுமார் 25 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

பல்மருத்துவ மேற்படிப்பு இன்று கலந்தாய்வு
2021-2022ம் ஆண்டிற்கான பல்மருத்துவ பட்ட மேற்படிப்பு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 358  இடங்களில் தனியார் கல்லூரியில் 296 இடங்களும், அரசு கல்லூரியில் 62 இடங்களும் உள்ளது. அதற்காக 1,018 விண்ணப்பம் பெறப்பட்டுள்ளதில் 964 தகுதியானவை என கண்டறியப்பட்டது. அதற்கான கலந்தாய்வு இன்று தொடங்கி நடைபெறும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சிலரின் தூண்டுதலின் பேரில் ஒப்பந்த பணியாளர்கள் போராட்டம்

சென்னை, தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தேசிய நலவாழ்வு குழுமத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுகிற 28,100 பணியாளர்களுக்கு 30 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. தேசிய நலவாழ்வு குழுமத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் நீங்கள், கடந்த நான்கரை மாதங்களாக ஊதிய உயர்வுக்கோரி எந்தவொரு விண்ணப்பமும் அளிக்கவில்லை. பொறுமையாக காத்து இருந்தீர்கள். பொறுமையாக இருந்ததற்கு தற்போது ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு விரும்பத்தகாத நிகழ்வு டி.எம்.எஸ் வளாகத்தில் நடைபெற்றது. ஒன்றரை ஆண்டுகளாக பணிபுரிபவர்கள் ஊதிய உயர்வு கோரி எந்தவித போராட்டத்திலும் ஈடுபடவில்லை. இரண்டு, மூன்று மாதங்களாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிபவர்கள் சிலரின் தூண்டுதலின் பேரில் தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.இரண்டு பேர் என்னைச் சந்தித்து நான்கு மாதங்களாக பணிபுரியும் எங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இப்படி பணிநிரந்தரம் செய்ய வாய்ப்பே இல்லை.

Tags : Tamil Nadu ,Minister ,Ma Subramanian , Tamil Nadu, Special Camp, Vaccination, Minister Ma. Subramanian
× RELATED உடல் பருமன் சிகிச்சையில் இளைஞர்...