×

மதுரை மாவட்டம் பாப்பாபட்டியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு: இந்தியாவின் சிறந்த மாநிலமாக தமிழகம் பெயரெடுக்க பாடுபடுவோம் என வேண்டுகோள்

மதுரை: மதுரை மாவட்டம் பாப்பாபட்டியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், இந்தியாவில் சிறந்த மாநிலமாக தமிழகம் பெயரெடுக்க அனைவரும் பாடுபடுவோம் என வேண்டுகோள் விடுத்தார். மகாத்மா காந்தியடிகள் 153வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தில் நேற்று, உள்ளாட்சி தேர்தல் நடக்கும் மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் கிராம சபை கூட்டம் நடந்தது. மதுரை மாவட்டம், பாப்பாபட்டியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று கிராம மக்களுடன் கலந்துரையாடினார். ஊராட்சி மன்ற தலைவர் முருகானந்தம் தீர்மானங்களை வாசித்தார்.

துணைத்தலைவர் லட்சுமி, முதல்வரின் தனி செயலாளர் உதயசந்திரன், கலெக்டர் அனீஷ்சேகர் ஆகியோர் மேடையில் அமர்ந்திருந்தனர். அமைச்சர் ஐ.பெரியசாமி, பல்வேறு துறை தலைமை அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: உண்மையான இந்தியா கிராமத்தில் இருந்து உருவாகிறது. கிராம ராஜ்யத்தையே காந்தியடிகள் வலியுறுத்தினார். காந்தியை மகானாக மாற்றியது இந்த மதுரை மண். அதுபோல, கடைக்கோடி மனிதனின் குரலை கேட்க வேண்டும் என்ற எண்ணத்தில் நான் வந்திருக்கிறேன். காந்தியை மாற்றிய இந்த மண்ணில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதில் மகிழ்ச்சி.

இது நம்ம கிராமம். இது என்னுடைய ஆட்சி அல்ல. நம்முடைய, உங்களுடைய ஆட்சி. பல திட்டங்கள் நிறைவேற்றும் ஆட்சி. தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டம் நடக்கிறது. நான் பங்கேற்ற எத்தனையோ நிகழ்ச்சிகளில் இங்கு பாப்பாபட்டியில் பங்கேற்றுள்ள இந்நிகழ்ச்சிதான் மகத்தானது.   கடந்த 2006ல் ஊராட்சி தேர்தல் நடத்த முடியாத சமூக சூழல் இருந்தது. மதுரை மாவட்டத்தில் பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், விருதுநகர் மாவட்டத்தில் கொட்டக்காச்சியேந்தல் ஆகிய 4 கிராமங்களில் தேர்தல் நடத்த முடியவில்லை. ஆனால் ஜனநாயகத்தை வலுப்படுத்த தேர்தல் நடத்தியே ஆக வேண்டும்.

அன்று கலைஞர் முதலமைச்சர். நான் அவரது அமைச்சரவையில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தேன். அந்த தேர்தலை நடத்த அயராது பாடுபட்டவர் அப்போதைய மதுரை கலெக்டர் உதயசந்திரன். இவர் மற்றும் அரசு செயலராக இருந்த அசோக் வரதன் ஷெட்டி இணைந்து, தேர்தலை சுமூகமாக நடத்தி கலைஞரிடம் பாராட்டு பெற்றனர். உங்கள் மனம் கவர்ந்த உதயச்சந்திரன் தற்போது என்னுடைய முதன்மை செயலாளராக உள்ளார்.  தேர்தல் நடந்து முடிந்ததும் கலைஞர் மகிழ்ச்சியடைந்தார். ‘‘ஊராட்சித் தலைவர்களை அழைத்து வாருங்கள். பாராட்ட வேண்டும்’’ என்றார். சென்னை அழைத்து வந்து கலைவாணர் அரங்கில் ஊராட்சி தலைவர்களுக்கு பாராட்டு விழா நடத்தினோம். விழாவில் கலைஞர் பங்கேற்று பேசினார்.

இதற்கு சமத்துவப்பெருவிழா என பெயர் வைத்தோம். விசிக தலைவர் திருமாவளவன் பேசும்போது, ‘‘சமத்துவ பெரியார்’’ என்ற பட்டம் கொடுத்தார். அப்போதே இந்த ஊராட்சி வளர்ச்சிக்கு ரூ.80 லட்சம், திமுக சார்பில் ரூ.20 லட்சம் வழங்கப்பட்டது. அந்த நிதியை வைத்து பல்வேறு வளர்ச்சிப்பணிகளை ஆற்றியுள்ளோம். தமிழகத்தில் எத்தனையோ ஊராட்சிகள் இருந்தாலும், இந்த பாப்பாபட்டிக்கு வர முக்கிய காரணம் இதுதான். காந்தியடிகள் காண விரும்பியது கிராம ராஜ்யம். இந்த கிராம வளர்ச்சிக்கு ஏராளமான திட்டங்களை உருவாக்கித் தந்தது திமுக ஆட்சி. தேர்தல் நேரத்தில் 505 வாக்குறுதிகள் அளித்தோம். இந்த 4 மாதங்களில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம்.

அதில் சொன்னதுடன், சொல்லாததையும் செய்துள்ளோம். நிச்சயம் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றும் கடமை உண்டு. மக்களைத்தேடி மருத்துவம், நமக்கு நாமே திட்டம், அண்ணா மறுமலர்ச்சி திட்டம், அனைத்து கிராம மேம்பாட்டு திட்டம் என அனைத்தும் நிறைவேற்றப்படும். இது சாமானிய மக்களுக்காக நடத்தப்படும் சாமானியர்கள் ஆட்சி. ஏழை, பணக்காரர் பாகுபாடின்றி ஒட்டுமொத்தமாக ஒளிமயமான எதிர்காலம் அமைக்க தமிழக அரசு பாடுபடும். கோரிக்கைகள் அனைத்தும் நிச்சயமாக, உறுதியாக நிறைவேற்றித் தருவோம். நீங்கள் வைத்துள்ள கோரிக்கை தொடர்பாக வாரந்தோறும் மதுரை கலெக்டரிடம் நேரடியாக தொடர்பு கொண்டு திட்டங்கள் செயல்பாடு குறித்து கேட்பேன்.

 இந்தியாவில் உள்ள முதல்வர்களில் சிறந்த முதல்வர் என்று என்னை கூறுகின்றனர். அதில் எனக்கு பெருமையில்லை. இந்தியாவில் உள்ள மாநிலங்களில் சிறந்த மாநிலம் என்று தமிழகம் பெயரெடுக்க வேண்டும். அனைத்து துறையிலும் தமிழகம் வளர்ச்சி பெற வேண்டும். அதுதான் எனக்கு பெருமை. நிச்சயம் அந்த நிலை வரும். அதற்காக நாம் அனைவரும் சேர்ந்து பாடுபடுவோம். வடபகுதி, தென் பகுதி என பாகுபாடு கூடாது. நாம் அனைவரும் ஒரே தமிழக மக்கள் என்ற உணர்வோடு இருப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

‘கட் அவுட்’ இல்லை; குலவையிட்டு வரவேற்பு
கிராமசபை கூட்டம் நடந்த மதுரை மாவட்டம் பாப்பாபட்டி கிராமத்திற்கு தேனி மெயின்ரோட்டிலிருந்து கிராமம் வரை செல்ல 6 கிமீ தூரம் இருக்கிறது. எனினும் மு.க.ஸ்டாலின் வரும் வழியில் கட்அவுட், வரவேற்பு வளைவு ஏதும் இன்றி எளிமையாக காட்சியளித்தது. பாப்பாபட்டியில் உள்ள ஒச்சாண்டம்மன் கோயில் திடலில் கிராமசபை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், சுமார் 2 கி.மீ தூரத்தில் உள்ள கூட்ட மைதானத்திற்கு, சாரை சாரையாக கிராம மக்கள் ஆர்வத்துடன் திரண்டனர். காலை 11.25க்கு கிராம சபை கூட்ட திடலுக்கு முதல்வர் வந்தார். பெண்கள் குலவை போட்டு ஆரவாரத்துடன் வரவேற்றனர். மக்கள் அமர்ந்திருந்த இடத்தை சுற்றி வந்து, வணக்கம் தெரிவித்தார். ஒச்சாண்டம்மன் கிராமக் கோயில் சார்பில் பூசாரிகள் முதல்வருக்கு மரியாதை தந்து வரவேற்றனர். கிராம சபை கூட்டம் மதியம் 12.15 மணிக்கு முடிந்தது.

வயலில் இறங்கிய முதல்வர்
பாப்பாபட்டி கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் காரில் சென்றபோது வழியில் நாட்டாபட்டி கிராமத்திற்கு வந்தார். அப்போது வயலில் பெண்கள் நெல் நாற்று நடவு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனை கண்ட முதல்வர் காரில் இருந்து இறங்கி, நடவு செய்த பெண்களை நோக்கி வரப்பில் நடந்து சென்றார். அவர்களிடம், ‘‘எல்லோரும் நல்லா இருக்கீங்களா? நடவு பணி எப்படி நடக்கிறது? எத்தனை ஏக்கர் நடவு செய்கிறீர்கள்’’ என முதல்வர் கேட்டார். அதற்கு பெண்கள், ‘‘தற்போதுதான், மழை பெய்து 2ம் போக நடவு பணி ஆரம்பித்துள்ளது’’ என்றனர். ‘‘அரசின் திட்டங்கள் கிடைக்கிறதா? இலவச பஸ் வசதி கிடைக்கிறதா? கொரோனா நிவாரண நிதி ரூ.4 ஆயிரம் கிடைத்ததா? நூறு நாள் திட்டத்தில் விவசாயிகளுக்கான கூலி சரியாக தரப்படுகிறதா’’ என பெண்களிடம் அடுத்தடுத்து முதல்வர் கேட்டார்.

அதற்கு, ‘‘கொரோனா நிதி கிடைத்தது. திமுக ஆட்சியில்தான் அனைத்தும் முறையாக கிடைக்கிறது. முதியோர் உதவித்தொகை உடனடியாக கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள்’’ என்றனர். ‘‘ஏற்பாடு செய்கிறேன்’’ என அவர்களிடம் கூறிவிட்டு, நாட்டாபட்டி கிராமத்திற்குள் வந்தார். அங்கு மூக்கையாத்தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினார். பின்பு அங்குள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் 3 விவசாயிகளுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் விவசாய கடனை முதல்வர் வழங்கினார்.

காந்தி மேலாடை துறந்த இடத்தில் முதல்வர் அஞ்சலி
மகாத்மா காந்தியடிகள் மேலாடை துறந்த மதுரை, மேல மாசி வீதியில் உள்ள இல்லம், நினைவிடம் மற்றும் காதி கிராப்ட் விற்பனை பிரிவு கட்டிடமாக செயல்பட்டு வருகிறது. காந்தியடிகளின் 153வது பிறந்தநாளையொட்டி நேற்று இங்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து காதி கிராப்ட் சிறப்பு முதல் விற்பனையை துவக்கி வைத்து, பார்வையாளர்கள் குறிப்பேட்டில் கையெழுத்திட்டார். பின்னர் புகைப்பட கண்காட்சியையும் பார்வையிட்டார்.

வரலாற்றில் முதல்முறை தமிழக வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரு முதல்வர் பங்கேற்ற கிராம சபை கூட்டம் என்ற பெருமையை பாப்பாபட்டி பெற்றிருக்கிறது.

Tags : MK Stalin ,Grama Niladhari ,Council ,Papapatti, Madurai District ,Tamil Nadu ,India , Madurai, Papabatti, Grama Sabha, MK Stalin, India,
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்...