×

பள்ளிபாளையம், திருச்செங்கோட்டில் கொட்டித் தீர்த்த கனமழையால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது: சாலைகளில் வெள்ளப்பெருக்கு; பொதுமக்கள் கடும் அவதி

பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் மற்றும் திருச்செங்கோட்டில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் விடிய, விடிய கனமழை பெய்தது. சாலைகளில் மழை வெள்ளம் ஆறாக பெருக்கெடுத்து ஓடியதோடு, வீடுகளை மழைநீர் சூழ்ந்ததால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். நாமக்கல் மாவட்டத்தில், நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு மேல், பள்ளிபாளையம், குமாரபாளையம், திருச்செங்கோடு ஆகிய பகுதிகளில் விடிய, விடிய கனமழை கொட்டித்தீர்த்தது. இந்த மழையால் குமாரபாளையம் அடுத்த குப்பாண்டபாளையத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு கால்வாயில் பாசனத்துக்கு திறக்கப்பட்டுள்ள தண்ணீருடன், மழைநீர் கலந்து காட்டாற்று வெள்ளமாக மாறியது.

வெப்படை, ஒட்டமெத்தை மற்றும் பள்ளிபாளையம் ஆகிய பகுதிகளில் சாக்கடை கால்வாயில் அடைப்புகள் மற்றும் ஆக்கிரமிப்பு காரணமாக, ஒன்பதாம்படி வரை மழைநீர் சாலைகளில் சுமார் 2 அடி உயரத்துக்கு பெருக்கெடுத்து ஓடியது. ஒன்பதாம்படி காவிரி கரையில் சாலையோரமுள்ள வீட்டில் பழனியப்பன்(67), ஈஸ்வரி(60) ஆகியோர் வசித்து வந்தனர். இவர்கள் சாக்கடை மீது பிளாட்பாரம் அமைத்து வாசலாக பயன்படுத்தி வந்தனர். நேற்று வெள்ளத்தில் இந்த பிளாட்பாரம் அடித்து செல்லப்பட்டதால், சுமார் 15 அடி நீள சாக்கடையை கடந்து, சாலைக்கு வர முடியாமல் இருவரும் தவித்தனர்.

இதையறிந்த வெப்படை தீயணைப்பு நிலைய அலுவலர் சிவக்குமார் தலைமையிலான வீரர்கள், வீட்டிற்குள் ஏணியை வைத்து இறங்கிச்சென்று, முதியவர்கள் இருவரையும் பாதுகாப்பாக மீட்டனர். இதே போல், ஆலாம்பாளையம் பேரூராட்சி பகுதியில் உள்ள கோரக்காட்டுபள்ளத்தில், வீட்டு வசதி துறையின் மூலம் கட்டப்பட்டுள்ள குடியிருப்பு பகுதியில் மழை வெள்ளம் புகுந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பள்ளிபாளையம் காவேரி ரயில் நிலையம் அருகே, புதிதாக கட்டப்பட்ட சுரங்கப்பாலத்தில், சுமார் 3 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியதால், வாகன போக்குவரத்து தடைபட்டது. இப்பகுதியில் சாக்கடை கால்வாய்கள் அனைத்தும் ஆக்கிரமிப்பால் தூர்ந்து போயுள்ளது.

தனியார் மருத்துவமனை முன்பு இருந்து ஓம்சக்தி கோயில் வழியாக சென்று பேருந்து நிலையம் திரும்பும் ஓடை முழுமையாக ஆக்கிரமித்து, கட்டடம் கட்டப்பட்டுள்ளதால் மழைநீர் வெளியேற வழியின்றி கண்டிப்புதூர், நடேச செட்டியார் வீதி, பழனியப்பா நகர் போன்ற தாழ்வான பகுதிகளில் தேங்கியது. இதனால், பள்ளிபாளையம் நகரமே வெள்ளத்தில் மிதந்தது. மேலும், பள்ளிபாளையம் பயணியர் மாளிகை அருகே ரயில்வே நிறுவனத்தால் 3 நாட்களில் கட்டமைக்கப்பட்ட சாதனை பாலத்தின் அடியில், நேற்று வெள்ளம் வெளியேறியது. இதனால் தரைவழியாக சென்ற வாகனங்கள் மேம்பாலம் வழியாக செல்லத்துவங்கின. பைக், கார் போன்ற சிறு வாகனங்கள் மேம்பாலம் வழியாக கடந்து சென்றன.

சங்ககிரி சாலையில் நேற்றிரவு நிறுத்தப்பட்டிருந்த காரை வெள்ளம் இழுத்துச் சென்றது. இந்த கார் சாலையோர தடுப்பில் மாட்டி தப்பியது. பஸ், லாரிகள் மட்டும் சென்றன. வெள்ளம் காரணமாக கார்கள் போன்ற சிறு வாகனங்கள் செல்வது தடை செய்யப்பட்டது. வெடியரசம்பாளையம் அரசு பள்ளியில் உள்ள சத்துணவு கூடத்தில் வெள்ளம் புகுந்ததால், அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள் மழை நீரில் ஊறி சேதமானது. அட்டைகள் ஊறி குழைந்து சரிந்ததால் முட்டைகள் உடைந்து வீணானது. பள்ளிபாளையம் வட்டாரத்தில் சுமார் 12 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல்நடவு பணிகள் நடைபெற்று வருகிறது.

நேற்று இரவு பெய்த மழையால், வரப்புகள் கரைந்து சேதமானது. பல இடங்களில் நெல் நாற்றுகள் அடித்து செல்லப்பட்டதால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதே போல், திருச்செங்கோட்டில் நேற்று அதிகாலை 2 மணி முதல் காலை 5 வரை பெய்த கனமழையால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. மாங்குட்டைபாளையம், சீதாராம்பாளையம், தொண்டிகரடு ஆகிய பகுதிகளில் இருந்து வந்த மழைநீர், சூரியம்பாளையம் ஏரிக்கு முழுவதும் செல்ல முடியாமல் அருகேயுள்ள வீடுகளுக்குள் புகுந்தது. சுமார் 50 வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதில் ஜீவானந்தம் (45), செல்லம்மாள் (60), ராஜாம்பாள்(50), ராமலிங்கம்(70) பழனிசாமி (50) ஆகியோரது வீடுகள் முழுமையாக சேதம் அடைந்தன.

மேலும் 3 வீடுகளின் சுவர்களில் பாதி விழுந்து விட்டது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. வீதிகளிலும் வெள்ளநீர் தேங்கியதால், பொதுமக்கள் வெள்ள நீரில் சிரமப்பட்டு நடந்து சென்றனர். கனமழையால் கூட்டப்பள்ளி ஏரி நிரம்பி, மழை வெள்ளம் கொல்லப்பட்டி பகுதிக்குள் நுழைந்து வயல்களில் தேங்கியுள்ளது. இதையடுத்து நகர திமுக பொறுப்பாளர் தாண்டவன் கார்த்தி மற்றும் வார்டு செயலாளர்கள், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள், கொமதேக நிர்வாகிகள், அதிகாரிகளுடன் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினர்.

இதனிடையே, கலெக்டர் ஸ்ரேயா சிங், திருச்செங்கோடு மற்றும் பள்ளிபாளையம் பகுதிக்கு வந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு மீட்பு பணிகள் மற்றும் மழைநீர் வெளியேறும் வாய்க்காலை தூர்வாரும் பணிகளை முடுக்கி விட்டார். அவருடன் ஆர்டிஓ இளவரசி, தாசில்தார் கண்ணன், நகராட்சி ஆணையாளர் (பொ) சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர். பின்னர், கலெக்டர் ஸ்ரேயா சிங் கூறுகையில், ‘சூரியம்பாளையம் பகுதியில் 5 வீடுகள் முழுவதுமாக சேதமடைந்துள்ளன. வீடுகள் சேதம் கணக்கெடுக்கப்பட்டு அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும். பாதிக்கப்பட்டவர்களை தனியார் மண்டபங்களில் முகாம் அமைத்து தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நீர்வழிப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, வழித்தடங்கள் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும்,’என்றார்.

* சேலம்-பள்ளிப்பாளையம் இடையே பஸ்கள் நிறுத்தம்
திருச்செங்கோடு, பள்ளிபாளையம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக பள்ளிபாளையம் சாலைகளில் நேற்று சுமார் 2 அடிக்கு மேல் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சேலத்தில் இருந்து ஈரோட்டுக்கு பள்ளிபாளையம் வழியாக செல்லும் அரசு பஸ்கள் இயக்கப்படுவது தற்காலிகமாக நேற்று காலை நிறுத்தப்பட்டது. இதுகுறித்து சேலம் கோட்ட போக்குவரத்து கழக பொது மேலாளர் மோகன் கூறுகையில், ‘‘சேலத்தில் இருந்து ஈரோட்டுக்கு பள்ளிபாளையம் வழியாக தினமும் 30 அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், பள்ளிபாளையத்திற்கு பேருந்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. அந்த பகுதியில் தண்ணீர் வடிந்தவுடன் அரசு பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்படும்,’’ என்றார்.

* அதிமுக ஆட்சியில் கட்டிய பாலம் வீண்
களியனூர் ஊராட்சி சுண்டக்காட்டில் இருந்து மணல்காடு செல்லும் ஓடையை கடக்க, கடந்த அதிமுக ஆட்சியில் ₹86 லட்சம் மதிப்பில்  தார்சாலையும் கான்கிரீட் பாலமும் கட்டப்பட்டது. இந்த பகுதியில் உள்ள செங்காடு, மசையன்காடு, அன்னை அஞ்சுகம் நகர், பூலக்காடு உள்ளிட்ட சிறு கிராமங்களை சேர்ந்த 110 குடும்பத்தினர் பயனடைந்தனர். இந்த சாலையும், பாலமும் அமைக்கப்பட்ட போதே, தரமானதாக இல்லை என அப்பகுதி மக்கள் புகார் எழுப்பினர். இருந்த போதிலும் அதிகாரிகள் விசாரணை ஏதும் இல்லாமல் மக்கள் பயன்பாட்டிற்கு விட்டனர். நேற்று பெய்த கனமழையில், இந்த பாலம் அடித்துச்செல்லப்பட்டது. சுமார் 30 அடி தொலைவுக்கு தார்சாலையும் வெள்ளத்தில் கரைந்து போனது.

* 12 மணி நேரத்திற்கு பின் வடிந்த வெள்ளம்
பள்ளிபாளையம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் துவங்கிய மழை, அதிகாலை 6.30 மணியளவில் நின்றது. விடிய, விடிய பெய்த கனமழையால் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள ஓட்டல்கள், தேநீர் கடைகள், பேன்ஸி ஸ்டோர்கள் அனைத்தும் மூடப்பட்டன. கடைகளில் வெள்ளம் புகுந்து சேதத்தை ஏற்படுத்தியது. காவல் நிலையம் எதிரே இரவு வேலைகள் முடிந்து சுத்தப்படுத்தி வைத்திருந்த சமையல் பாத்திரங்களை வெள்ளம் இழுத்து சென்றது. மழை விட்ட பின்னரும் தொடர்ந்த வெள்ளம், மதியம் 12 மணியளவில் சாலையை விட்டு சாக்கடைக்குள் இறங்கியது. அதன் பின்னர் மெல்ல இயல்பு நிலை திரும்பியது.

Tags : Pallipalayam, Tiruchengode , Pallipalayam, Tiruchengode: Heavy rains inundated houses: flooded roads; The public suffers severely
× RELATED பள்ளிபாளையம், திருச்செங்கோட்டில்...