×

கோடப்பமந்து கால்வாய் தடுப்புசுவர் இடிந்து விழுந்ததால் குழாய்கள் அமைக்கும் பணி பாதிப்பு

ஊட்டி: ஊட்டி லோயர் பஜார் சாலையில் டவுன் பஸ் நிலையம் அருகே கோடப்பமந்து கால்வாய் தடுப்புசுவர் இடிந்து விழுந்ததால் பணிகள் பாதிப்படைந்துள்ளது. ஊட்டி நகராட்சி சார்பில் ரூ.5 கோடி மதிப்பில் கோடப்பமந்து கால்வாயை தூர்வாரும் பணிகள் மற்றும் கால்வாயில் உள்ள பழுதடைந்த பாதாள சாக்கடை குழாய்களை மாற்றி ஆழ்நுழை துவாரங்கள் கட்டும் பணிகள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் துவக்கப்பட்டது. இப்பணிகளுக்காக, புதிதாக குழாய்கள் கொண்டு வரப்பட்டன. மேலும் ஜேசிபி., இயந்திரங்களின் உதவியுடன் ஏடிசி., லோயர் பஜார் உள்ளிட்ட பகுதிகளில் தூர்வாறும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதனிடையே, கொரோனா ஊரடங்கு காரணமாக ஆட்கள் பற்றாக்குறையால் தூர்வாரும் பணி தடைபட்டது. கடந்த மாத துவக்கத்தில் இருந்து பணிகள் மீண்டும் நடைபெற்று வருகின்றன. லோயர் பஜார் சாலையில், டவுன் பஸ் நிலையம் அருகே கால்வாயின் நடுவே பள்ளம் தோண்டப்பட்டு ராட்சத குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கால்வாய் ஓரத்தில் இருந்த தடுப்புச்சுவர் சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு திடீரென சாலையுடன் பெயர்ந்து இடிந்து விழுந்தது. இரவு நேரம் என்பதால் அப்பகுதியில் வாகனங்கள் எதுவும் நிறுத்தப்படாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் மழை தீவிரமடையும் முன் கால்வாயை தூர்வாரி கழிவுநீர் குழாய்கள் அமைக்கும் பணிகளை முடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : Impact of pipe laying work due to collapse of Godappamandu canal barrier
× RELATED வரும் 10ம் தேதி அட்சயதிரிதியை...