நகரங்களில் குப்பைகளை அகற்ற தூய்மை இந்தியா திட்டம் 2.0: ரூ.1.41 லட்சம் செலவில் அமல்

புதுடெல்லி:  நகரங்களை ரூ.1.41 லட்சம் கோடியில் தூய்மைப்படுத்துவதற்கான, ‘தூய்மை இந்தியா திட்டம் நகர்ப்புறம் 2.0’ திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். கடந்த 2014ம் ஆண்டு ஒன்றியத்தில் பாஜ ஆட்சி அமைத்த பிறகு, காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதி, ‘தூய்மை இந்தியா திட்டம்,’ என்ற கனவு திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். குப்பை இல்லாத நாடாக இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பது இதன் நோக்கம். கிராமப்புறங்களில் இத்திட்டம் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, காந்தியின் 150வது ஆண்டு பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு, நகரங்களை குப்பை இன்றி சுத்தப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், ‘தூய்மை இந்தியா திட்டம் நகர்ப்புறம் 2.0’ என்ற திட்டத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: ‘தூய்மை இந்தியா திட்டம் நகர்ப்புறம் 2.0’, இந்தியாவை நகரமாயமாகும் சவால்களை திறம்பட எதிர்கொள்வதற்கான பாதையில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும். மேலும், 2030ம் ஆண்டில் நிலையான வளர்ச்சி என்ற இலக்கை நாடு அடைவதற்கும் இது பெரியளவிலான பங்களிப்பை வழங்கும். அனைத்து நகரங்களையும் குப்பை இல்லாதவையாக மாற்றுவதும், அனைத்து நகரங்களிலும் திறந்தவெளியில் மலம் கழிப்பதை தடுப்பதும், இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இதன் மூலமாக நகர்ப்புறங்களில் பாதுகாப்பான சுகாதார இலக்கை எட்ட முடியும். இத்திட்டம் ரூ.1.41 லட்சம் கோடியில் செயல்படுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

2.68 கோடி வீடுகளுக்கு குழாய் தண்ணீர் வசதி

கழிவுநீரை சுத்திகரித்து மறுசுழற்சிக்கு பயன்படுத்தும் ‘அம்ருத் 2.0’ என்ற திட்டத்தையும் பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.மேலும் இத்திட்டத்தின் கீழ், 4,700 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 2.68 கோடி குழாய் இணைப்புகள் மூலமாக 100 சதவீதம் சுத்தமான தண்ணீர் விநியோகம் செய்யப்படும். இத்திட்டத்துக்கு ரூ.2.87 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

Related Stories: