×

தேசிய பாதுகாப்பு ஆலோசகரை சந்தித்த பின் திடீர் முடிவு காங்கிரசிலிருந்து விலகுகிறேன்: அமரீந்தர் சிங் அறிவிப்பு

புதுடெல்லி: பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த மறுநாளே தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாலை சந்தித்து பேசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர் காங்கிரசில் இருந்து விலகப் போவதாக அறிவித்துள்ளார். பஞ்சாப் முதல்வராக இருந்த அமரீந்தர் சிங்குக்கும், காங்கிரஸ் மாநில தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே ஆரம்பம் முதலே மோதல் நிலவி வந்தது. அமரீந்தரை அவமதிக்கும் வகையில், காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் 3 முறைக்கு மேல் சித்து ஆலோசனை கூட்டங்கள் நடத்தினார். மேலும், அமரீந்தரை முதல்வர் பதவியில் இருந்து நீக்கும்படி காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் 50 பேர், கட்சித் தலைவர் சோனியாவுக்கு கடிதம் எழுதினர்.

இதனால் கோபமடைந்த அமரீந்தர் சிங், ‘இனியும் அவமானத்தை பொறுக்க முடியாது,’ என்று கூறி, முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும், ‘சித்துவால் காங்கிரசுக்கு பேரழிவு ஏற்படும். அவர் பாகிஸ்தானுடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளார். அவர் தலைமையில் அடுத்த சட்டப்பேரவை தேர்தலை காங்கிரஸ் சந்தித்தால், அவருக்கு போட்டியாக நானே வலுவான வேட்பாளரை நிறுத்துவேன்,’ என்று குற்றம்சாட்டினார். இந்நிலையில், பஞ்சாப் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி பொறுப்பேற்றார். இவர் சமீபத்தில் அமைச்சரவை விரிவாக்கம் செய்த நிலையில், காங்கிரஸ் மாநில தலைவர் பதவியை சித்து நேற்று முன் தினம் திடீரென ராஜினாமா செய்தார்.

இவருக்கு ஆதரவாக ஒரு பெண் அமைச்சர் உள்பட சிலரும் ராஜினாமா செய்தனர். இதனால், பஞ்சாப் மாநில அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில், அமரீந்தர் சிங் திடீரென டெல்லி புறப்பட்டு சென்றார். காங்கிரஸ் மேலிட தலைவர்களை சந்திப்பார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேற்று முன்தினம் சந்தித்து பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அவர் பாஜ.வில் சேர இருப்பதாகவும், பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் பாஜவுக்கு தலைமை ஏற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று அவர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாலையும் அவரது இல்லத்தில் சந்தித்து 30 நிமிடங்கள் பேசினார்.

பின்னர், அமரீந்தர் அளித்த பேட்டியில், ‘‘அமித்ஷாவை சந்தித்ததால் நான் பாஜவில் இணைய இருப்பதாக கூறுவது தவறு. அதே நேரம், காங்கிரசில் தொடர்ந்து நீடிக்கவும் எண்ணமில்லை. அக்கட்சியில் இருந்து விலகுகிறேன். ஆனால், பாஜ.வில் சேர மாட்டேன். எனது ஆதங்கத்தை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கேட்க தவறி விட்டனர்,’’ என்றார். இதனால், அமரீந்தர் சிங் புதிய கட்சி தொடங்கி, பாஜ.னுடன் கூட்டணி சேர்ந்து பஞ்சாப் தேர்தலை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Tags : Congress ,National Security ,Amarinder Singh , National Security Adviser, Congress, Amarinder Singh
× RELATED முன்மொழிந்தவர்களின் கையெழுத்தில்...