×

ஊரக உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மாவட்ட கலெக்டர், எஸ்.பி.க்களுடன் மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை

சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ளதால் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர், எஸ்.பி.க்களுடன் மாநில தேர்தல் ஆணையர் நேற்று வீடியோ கான்ப்ரன்ஸ் மூலம் ஆய்வு நடத்தினார். தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள மாநில தேர்தல் ஆணையத்தில் இருந்து காணொலி காட்சி வழியாக 37 மாவட்ட தேர்தல் அலுவலர்கள், மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோருடன் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான தயார் நிலை ஏற்பாடுகள் குறித்து நேற்று ஆய்வு மேற்கொண்டார். இக்கூட்டத்தில் மாநில தேர்தல் ஆணைய செயலாளர் சுந்தரவல்லி. ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சி இயக்குநர் பிரவீன் பி.நாயர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.  

இந்த கூட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை அமைதியாக நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன.  அது மட்டுமல்லாமல் கூட்டத்தில் வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் கோவிட் 19 தொற்று பரவலை தடுக்க கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள். அனைத்து வாக்குப்பதிவு அலுவலர்கள் மற்றும் தேர்தல் அலுவலர்களுக்கு கோவிட்-19 திருப்பூசி செலுத்தப்பட்டதை உறுதி செய்ய வேண்டும். வாக்குச்சாவடிச் சீட்டு வாக்காளர்களுக்கு விநியோகம் செய்தல். வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தல். மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தல்- மாதிரி பயணத்திட்டம். மாதிரி நன்னடத்தை விதிகளை தவறாது கடைப்பிடிக்க வேண்டும். விதிமீறல் இனங்கள் குறித்த அறிக்கை.

பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் மதுபானம் குறித்த அறிக்கை. பதற்றமான வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள், வீடியோ பதிவுகள் மற்றும் தேர்தல் மேற்பார்வையாளர் பணிகள். வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்கு எண்ணுகை மையங்களில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த விவரம். வாக்கு எண்ணும் மையத்தில் சிசி டிவி அமைத்தல். வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு அறைக்கு சிசி டிவி அமைத்தல் உள்ளிட்ட விவரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு அறிவுரைகள் வழங்கப்பட்டது. தேர்தல் நெருங்கி வருவதால் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா, பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் பறக்கும் படைகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : State Election Commissioner ,District Collector ,SPs , State Election Commissioner consults with District Collector, SPs as rural local elections approach
× RELATED கொடைக்கானலுக்குச் செல்ல உள்ளூர்...