×

நீண்ட காலமாக சாலைகளை மறித்து போராடுவது பிரச்சனைக்கு எப்படி தீர்வாகும்?: விவசாயிகள் போராட்டம் குறித்து சுப்ரீம் கோர்ட் அதிருப்தி..!!

டெல்லி: நீண்ட காலமாக சாலைகளை மறித்து போராடுவது பிரச்சனைக்கு எப்படி தீர்வாகும்? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது. விவசாயிகள் நிரந்தரமாக சாலைகளை மறித்து போராட்டம் நடத்துவதற்கு அதிருப்தி தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், நீதித்துறை, நாடாளுமன்றம் மூலமாகவே பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறது. ஒன்றிய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் மழை, வெயிலை பொருட்படுத்தாமல் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் சாலை மற்றும் ரயில் போக்குவரத்தை முடக்கி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக டெல்லியின் எல்லைப் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் குருகிராம், நொய்டா, காசியாபாத் உள்ளிட்ட எல்லை பகுதிகளில் ஏராளமான கார்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், சாலைகளை மறித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிமன்றம் சட்டங்களை விதித்துள்ளதால் அதை செயல்படுத்துவது குறித்து ஒன்றிய அரசு தீர்மானிக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

அப்போது பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் விவசாயிகள் தரப்பில் வருவதில்லை என்றும் இந்த வழக்கில் அவர்களையும் சேர்க்க வேண்டும் என்றும் ஒன்றிய அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். விவசாயிகள் நிரந்தரமாக சாலைகளை மறித்து போராட்டம் நடத்துவதற்கு அதிருப்தி தெரிவித்த உச்சநீதிமன்றம், நீதித்துறை, நாடாளுமன்ற விவாதம்  உள்ளிட்டவை வாயிலாகவே பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று தெரிவித்தது. மேலும் சாலைகளை மறித்து போராட்டம் நடத்துவதா? நீண்ட காலமாக சாலைகளை மறித்து போராடுவது பிரச்சனைக்கு எப்படி தீர்வாகும்? என்றும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.

Tags : Supreme Court , Road, Struggle, Farmers, Supreme Court
× RELATED முத்திரைத்தாள் வரி வசூலிப்பது என்பது...