கோயில் சொத்துக்களை முறைப்படுத்த ஓய்வு பெற்ற வருவாய், நில அளவை அலுவலர்கள்: ஆணையர் குமரகுருபரன் அதிரடி நடவடிக்கை

சென்னை: கோயில் சொத்துக்களை முறைப்படுத்தும் பணிக்காக, ஓய்வு பெற்ற வருவாய், நில அளவை அலுவலர்கள் கமிஷனரின் ஒப்புதல் பெற்று நியமனம் செய்ய வேண்டும் என்று ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

* கோயில் நிலங்களை முறைப்படுத்தும் பணிக்கு ஒரு இணை ஆணையர் மண்டலத்துக்கு ஒரு ஓய்வு பெற்ற துணை ஆட்சியர், ஒரு உதவி ஆணையர் பிரிவிற்கு ஒரு ஓய்வு பெற்ற வட்டாட்சியரும், ஒரு ஓய்வு பெற்ற நில அளவையரும், ஒரு ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலரும், ஆணையரின் அனுமதி பெற்று பணி நியமனம் மற்றும் பணி நீட்டிப்பு செய்ய  வேண்டும்.

* ஓய்வு பெற்ற வட்டாட்சியர்கள் கிடைக்காதபோது அப்பதவியை ஓய்வு பெற்ற துணை வட்டாட்சியர் அல்லது  ஓய்வு பெற்ற வருவாய் ஆய்வாளர் அல்லது ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை கொண்டு பணிபுரிய அனுமதிக்கலாம்.

* இதே போன்று ஓய்வு பெற்ற நிலஅளவையர் பதவியினை ஏதேனும் ஒரு நிலையில் ஓய்வு பெற்ற நில அளவையர் பதவியைக் கொண்டு பணிபுரிய அனுமதிக்கலாம்.

* கோயில் நிலங்கள் முறைப்படுத்தும் பணிக்காக இணை ஆணையர் மண்டலந்தோறும் நியமிக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற வருவாய்த்துறை அலுவலர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகள் குறித்து அவர்களால் சமர்பிக்கப்படும் நாள் குறிப்பு மற்றும் மாதாந்திர  பணி முன்னேற்றம் குறித்து மண்டல இணை ஆணையரால் சீராய்வு செய்யப்பட்டு மாதம்தோறும் அறிக்கை சமர்பிக்க வேண்டும்.

* ஓவ்வொரு உதவி ஆணையர் மண்டலங்களிலும் சராசரியாக 1400 கோயில்கள் உள்ள நிலையில், அதிக அளவிலான நிலங்களை கொண்ட கோயில்களுக்கு மேற்கண்டவாறு இணை ஆணையர் மண்டலங்களில் நியமனம் செய்யப்படும் ஓய்வு பெற்ற வருவாய்த்துறை அலுவலரை கொண்டு பணியினை முடிக்க இயலாத நிலை ஏற்படும். எனவே, ஏற்கனவே இருந்த நடைமுறைகளின்படி தேவைப்படும் கோயில்களுக்கு ஆணையர் அனுமதி பெற்று ஓய்வு பெற்ற வருவாய்த்துறை அலுவலர்களை பணி நியமனம் செய்ய அனுமதிக்கலாம்.

* ஓய்வு பெற்ற வருவாய்த்துறை அலுவலர்கள், நில அளவைத்துறை அலுவலர்களுக்கு வழங்கப்பட்டு வரும் தொகுப்பூதியம் திருத்தியமைத்து வரும் 1ம் தேதி முதல் உத்தரவிடப்படுகிறது. அதன்படி, துணை ஆட்சியருக்கு ரூ.30 ஆயிரம், வட்டாட்சியர் ரூ.25 ஆயிரம், துணை வட்டாட்சியர் ரூ.17 ஆயிரம், கிராம நிர்வாக அலுவலர் ரூ.12 ஆயிரம், நில அளவர் ரூ.15 ஆயிரம், குறுவட்ட நில அளவையர் ரூ.12 ஆயிரம், சார் ஆய்வாளர் ரூ.14 ஆயிரம், துணை ஆய்வாளர் ரூ.15 ஆயிரம், ஆய்வாளர் ரூ.18 ஆயிரம் வழங்கப்படுகிறது.

Related Stories:

More
>