திருவொற்றியூரில் நள்ளிரவு பயங்கரம் திருந்தி வாழ்ந்த ரவுடி படுகொலை: மாணவர்கள் உட்பட 5 பேர் கைது

சென்னை:எண்ணூர் நேதாஜி நகர் 1வது தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (40). முன்னாள் ரவுடியான இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி உட்பட 12க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இதில் பெரும்பாலான வழக்குகள் முடிந்த நிலையில், ஆறுமுகம் மனம் திருந்தி தற்போது அந்த பகுதியில் ஆட்டோ ஓட்டிவந்தார். இவர் திருமணம் செய்யாததால் அம்மா சரோஜாவுடன் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில், ஆறுமுகம் வீட்டுக்கு வந்த 5 பேர், அங்கு தூங்கிக் கொண்டிருந்த ஆறுமுகத்தை சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.

பின்னர், அங்கு கிடந்த கல்லை எடுத்து தலையில் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பினர். சத்தம் கேட்டு உறவினர்கள் எழுந்து பார்த்தபோது ஆறுமுகம் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதுபற்றி அறிந்து அங்கு பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு நிலவியது. தகவலறிந்து எண்ணூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, ஆறுமுகம் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொலை கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், ஆறுமுகம் கொலையில் தொடர்புடையதாக ஜெயக்குமார் (23), ஐடிஐ மாணவன் பியான் வினோத் (21), கிளிண்டன் (21), தேசப்பன் (22), டிப்ளமோ 2ம் ஆண்டு படித்து வரும் ஆகாஷ் (18) ஆகிய 5 பேரை நேற்று அதிகாலை போலீசார்  கைது செய்தனர். அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில், முன்விரோதம் காரணமாக ஆறுமுகம் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று தெரியவந்தது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

More