தா.பழூரில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு-சீர்வரிசை பொருட்களை எம்எல்ஏ கண்ணன் வழங்கினார்

தா.பழூர் : தா.பழூரில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டது. அவர்களுக்கு சீர்வரிசை பொருட்களை எம்எல்ஏ கண்ணன் வழங்கினார்.

அரியலூர் மாவட்டம் தா.பழூரில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகள் கீழ் தமிழக முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க சமுதாய வளைகாப்பு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கர்ப்பிணி தாய்மார்களை வாழ்த்தி அவர்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார். முன்னதாக மாவட்ட திட்ட அலுவலர் சாவித்திரி வரவேற்று பேசினார்.

ஒன்றிய குழு தலைவர் மாகலெட்சுமி, ஊராட்சி மன்ற தலைவர் கதிர்வேல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராஜ், வட்டார மருத்துவ அலுவலர் குமரேசன், சித்த மருத்து அலுவலர் வசுமதி , வட்டார கல்வி அலுவலர் ராசாத்தி ஆகியோர் கர்ப்பிணி தாய்மார்கள் கர்ப்பகாலத்தில் உட்கொள்ள வேண்டிய, காய்கறி, பழங்கள், கீரைகள் உள்ளிட்ட உணவு பழக்க வழக்கங்கள் பற்றியும், அதன் மூலம் தாய் மற்றும் சேய் நலன் பற்றியும் விரிவாக கூறினர்.

இந்நிகழ்ச்சியில் 82 கர்ப்பிணி தாய்மார்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு முறைப்படி மாலை அணிவித்து, நலுங்கு வைத்து, வளையல் அணிவித்து சீர் வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் அனைத்து அங்கன்வாடி பணியாளர்களும் கலந்து கொண்டனர். நிறைவாக கர்ப்பிணி தாய்மார்களுக்கு உணவு வழங்கப்பட்டது. குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் யசோதா தேவி நன்றி கூறினார்.

Related Stories: