திருவனந்தபுரத்தில் உள்ள பிரம்மோஸ் ஏவுகணை தயாரிப்பு மையத்தில் மர்ம நபர் ஊடுருவலா?

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் விமான நிலையம் அருகே சாக்கை பகுதியில், சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் பிரம்மோஸ் ஏவுகணை தயாரிப்பு மையம் உள்ளது. மத்திய பாதுகாப்பு துறையின் கட்டுப்பாட்டில் இது உள்ளது குறிப்பிடத்தக்கது. இங்கு ஏவுகணை தயாரிப்பு, உதிரி பாகங்கள் இணைக்கும் பணிகள் ஆகியவை நடந்து வருகின்றன. வெளியாட்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படுவது இல்லை. இந்த நிலையில் நேற்று இங்கு இந்திய விண்வெறி ஆய்வு மைய விஞ்ஞானிகள், பிரம்மோஸ் தயாரிப்பு மைய உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது ஒரு மர்ம நபர் நடமாடியதாக நிர்வாக அதிகாரி சதோரிக்கு தெரியவந்தது.

உடனே அவர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். தொடர்ந்து அவர்கள் வளாகம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டனர். நீண்ட நேர சோதனைக்கு பிறகு யாரும் சிக்கவில்லை. இதையடுத்து சங்குமுகம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் உதவி கமிஷனர் ப்ரித்வீராஜ் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று சோதனை நடத்தினர். இருப்பினும் யாரும் சிக்கவில்லை. உடனே கண்காணிப்பு காமிராவை பரிசோதித்து பார்த்தனர். அதிலும் எந்த விவரங்களும் கிடைக்கவில்லை. இது குறித்து நிர்வாக அதிகாரி சதோரியிடம் விசாரித்தனர்.

அப்போது அவர் கூறியதாவது: ஆலோசனை கூட்டம் நடந்து கொண்டிருந்த போது பேண்ட், சட்டை அணிந்து கொண்டு ஒருவர் நடமாடினார். பின்புறம் ஒரு பேக்கையும் வைத்திருந்தார். இஸ்ரோ மைய அதிகாரிகளுடன் வந்த அதிகாரியாக இருக்கலாம் என்று கருதினேன். கூட்டம் முடிந்து அதிகாரிகள் செல்லும் போது அவர்களுடன் வந்த நபரை காணவில்லை. அதன் பிறகே எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே உயர் அதிகாரிகளுக்கும், பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தேன் என்று கூறினார். இதையடுத்து நள்ளிரவு வரை போலீசார், பாதுகாப்பு அதிகாரிகள் அங்கு சோதனை நடத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

Related Stories: