×

தமிழகத்தில் இனிமேல் யானைகளை தனி நபர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக்கூடாது: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் இனிமேல் யானைகளை தனி நபர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவில் யானைகள் பராமரிப்பு தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழகத்தில் கோவில் யானைகள், வளர்ப்பு யானைகள், வனத்துறை யானைகளின் எண்ணிக்கை, அவற்றின் வயது, உடல்நிலை குறித்த அறிக்கையுடன், அவற்றின் வீடியோ பதிவையும் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்குகள், தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, கோவில்களின் கட்டுப்பாட்டில் 32 யானைகளும், தனியார் கட்டுப்பாட்டில் 31 யானைகளும், வனத்துறை கட்டுப்பாட்டில் 67 யானைகளும் உள்ளதாகவும், அவற்றை வீடியோ பதிவு செய்யும் பணிகள் நடந்து வருவதால், அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என தமிழக அரசுத்தரப்பில் கோரப்பட்டது.

இதனை ஏற்று கொண்ட நீதிபதிகள், தமிழகத்தில் தனியார் யாரும் யானையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க கூடாது என உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த மாதத்திற்கு ஒத்திவைத்தனர். மேலும், கடந்த 5 ஆண்டுகளில் வளர்ப்பு யானைகள், கோவில் யானைகள், வனத்துறை கட்டுப்பாட்டில் இருந்த யானைகள் குறித்த விவரத்தையும் தாக்கல் செய்ய நீதிபதிகள்  உத்தரவிட்டனர்.



Tags : Tamil Nadu , Elephants can no longer be controlled by individuals in Tamil Nadu: iCourt order
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...