×

பசுபதிபாண்டியன் கொலைக்கு பழிக்குப்பழி பெண் கொடூரமாக வெட்டி கொலை: தலையை துண்டித்து தூக்கிச்சென்ற கும்பல்; திண்டுக்கல்லில் பட்டப்பகலில் பயங்கரம்

திண்டுக்கல்: தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனர், தலைவர் பசுபதிபாண்டியன். இவர் திண்டுக்கல் நந்தவனப்பட்டியில் உள்ள தனது வீட்டின் முன்பு 2012, ஜனவரி 10ம் தேதி ஒரு கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தூத்துக்குடி மூலக்கரையை சேர்ந்த சுபாஷ் பண்ணையார், புறா மாடசாமி, திண்டுக்கல் நந்தவனப்பட்டியை சேர்ந்த முத்துப்பாண்டி, நிர்மலா உள்பட 16 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இவ்வழக்கு விசாரணை திண்டுக்கல் நீதிமன்றத்தில் நடந்து வருகின்றது. அடுத்த மாதம் 18ம்  தேதி வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.

இவ்வழக்கில் 5வது குற்றவாளியான நிர்மலா (70) நந்தவனப்பட்டி வள்ளுவர் காலனியை சேர்ந்தவர். சீலப்பாடி ஊராட்சி மன்ற கவுன்சிலராக இருந்தவர். 2 மகன்கள் உள்ளனர். நிர்மலா, கொலையாளிகளுக்கு வாடகைக்கு வீடு பிடித்து கொடுத்து, பசுபதிபாண்டியன் கொலையில் முக்கிய பங்காற்றியவர் என கூறப்படுகிறது. இந்நிலையில் நிர்மலா, திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி அருகே இ.பி காலனி ரோடு பகுதியில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு வேலை பிரித்துக் கொடுக்கும் பணியில் நேற்று ஈடுபட்டிருந்தார். அதன்பின்பு அடைத்திருந்த கடை முன்பாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அவரது அருகே 4 பெண்கள் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

காலை 9 மணியளவில் இருசக்கர வாகனங்களில் மர்ம நபர்கள் சிலர் அங்கு வந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் நிர்மலாவை பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்ட தொடங்கினர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற பெண்கள் அலறியடித்து ஓடினர். மர்மக்கும்பல் வெட்டியதில் நிர்மலா, அதே இடத்தில் ரத்தவெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார். பின்னர் அவரது தலையை மட்டும் கும்பல் துண்டித்து டூவீலரில் எடுத்துச் சென்றனர். நந்தவனப்பட்டியில் பசுபதிபாண்டியன் கொலை செய்யப்பட்ட அவரது வீட்டின் முன்புள்ள பிளக்ஸ் பேனர் அருகே தலையை வைத்துவிட்டு தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் சரக டிஐஜி விஜயகுமாரி, எஸ்பி சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். நிர்மலாவின் தலையையும், உடலையும் கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து அங்கிருந்த 100 நாள் வேலை பார்க்கும் பெண்களிடம் விசாரணை மேற்கொண்டனர். சம்பவ இடத்திற்கு வந்த மோப்ப நாய் ரூபி சிறிது தூரம் ஓடிச்சென்று திரும்பி வந்தது. தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

* தொடரும் படுகொலைகள்
பசுபதிபாண்டியன் கொலை வழக்கில் 16 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதில் 2வது குற்றவாளியான சாமி என்ற ஆறுமுகசாமி ஆத்தூர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கொலை செய்யப்பட்டார். 6வது குற்றவாளியான செல்வம் என்ற புறா மாடசாமி விருதுநகர் மாவட்டம், சாத்தூர் காவல்நிலைய எல்லையில் 2013ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். 15வது குற்றவாளியான திண்டுக்கல் கரட்டழகன்பட்டியை சேர்ந்த முத்துப்பாண்டி மதுரை அழகர்கோவில்  பகுதியில் 2014ம் ஆண்டு வெட்டி கொலை செய்யப்பட்டார். தற்போது 5வது குற்றவாளியான நிர்மலா கொலை செய்யப்பட்டுள்ளார். இதோடு இவ்வழக்கில் தொடர்புடைய 5 பேர் பசுபதிபாண்டியன் ஆதரவாளர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Dindigul , Woman brutally hacked to death in revenge for Pasupathipandian murder: gang beheaded; Terrible in broad daylight in Dindigul
× RELATED திண்டுக்கல்-நத்தம் ரோட்டில்...