ஜெய்ஸ்வால், லோம்ரர் அதிரடி பஞ்சாப் கிங்சுக்கு 186 ரன் இலக்கு

துபாய்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு 186 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் முதலில் பந்துவீசியது. ராயல்ஸ் தொடக்க வீரர்களாக எவின் லூயிஸ், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி, முதல் விக்கெட்டுக்கு 5.3 ஓவரில் 54 ரன் சேர்த்து நல்ல அடித்தளம் அமைத்தது. லூயிஸ் 36 ரன் (21 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி அர்ஷ்தீப் பந்துவீச்சில் மயாங்க் வசம் பிடிபட்டார்.

அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 4 ரன்னில் வெளியேற, 3வது விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வால் - லிவிங்ஸ்டோன் இணைந்து 48 ரன் சேர்த்தனர். லிவிங்ஸ்டோன் 25 ரன் (17 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்), ஜெய்ஸ்வால் 49 ரன் (36 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினர். 5வது வீரராகக் களமிறங்கிய மஹிபால் லோம்ரர் சிக்சர்களாகப் பறக்கவிட்டு அமர்க்களப்படுத்த ராஜஸ்தான் ஸ்கோர் எகிறியது. ரியான் பராக் 4 ரன்னில் வெளியேற, லோம்ரர் 17 பந்தில் 43 ரன் (2 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி அர்ஷ்தீப் பந்துவீச்சில் மார்க்ரம் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

கடைசி கட்டத்தில் திவாதியா 2, மோரிஸ் 5, சகாரியா 7, கார்த்திக் தியாகி 1 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்து அணிவகுத்தனர். ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவரில் 185 ரன் குவித்து ஆல் அவுட்டானது. முஸ்டாபிசுர் (0) ஆட்டமிழக்காமல் இருந்தார். பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங் 4 ஓவரில் 32 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றினார். முகமது ஷமி 3, இஷான் போரெல், ஹர்பிரீத் பிரார் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். ராஜஸ்தான் அணி 19 ரன்னுக்கு கடைசி 6 விக்கெட்டை இழந்தது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 186 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் களமிறங்கியது.

Related Stories:

More
>