ராணுவ ஹெலிகாப்டர் நொறுங்கி 2 விமானி பலி

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் காட்டுப் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 2 விமானிகள் பலியாகினர். ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் ராணுவத்துக்கு சொந்தமான சீடாக் ரக போர் ஹெலிகாப்டர் வழக்கமான பயிற்சியில் நேற்று காலை ஈடுபட்டது. அப்போது, கடுமையான பனிமூட்டம் காரணமாக விமானிகளின் கட்டுப்பாட்டை ஹெலிகாப்டர் இழந்தது. இதனால், சிவ் கர் தார் பகுதியில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது.

இதில், விமானிகள் ரோகித் குமாரும், அனுஜ் ராஜ்புத்தும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி இருவரும் இறந்தனர். அவர்களின் மறைவுக்கு விமானப்படை ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

Related Stories: