×

விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகம் முன் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு-போலீசார் சமாதானம்

விருத்தாசலம் :  விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகம் முன் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த ஆவினங்குடி அருகே மேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பரமசிவம் மகன் ரமேஷ்(32). ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மலர்க்கொடி(31). இவர்களுக்கு ரவிவர்மா(6) என்ற மகனும், ரதிவதனி(2) என்ற மகளும் உள்ளனர். ரமேஷின் உறவினர் மூலம் விருத்தாசலம் நாச்சியார் பேட்டையில் உள்ள லட்சுமி என்ற பெண் ஒருவர் அறிமுகமாகியுள்ளார். லட்சுமி தான் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை செய்து வருவதாகவும், அங்கு மாவட்ட ஆட்சியரின் கார் ஓட்டுவதற்கு காலி பணியிடம் உள்ளது.

பணம் கொடுத்தால் அந்த வேலையை நான் வாங்கித்தருகிறேன் என கூறி ரமேஷிடம் நான்கரை லட்சம் ரூபாயை கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு வாங்கியுள்ளனர். சிறிது நாட்களுக்குப் பிறகு வேலை கிடைத்துவிட்டது என ஒரு கடிதத்தை ரமேஷிடம் அந்தப் பெண் வழங்கியுள்ளார். அந்த கடிதத்தை எடுத்துக்கொண்டு ரமேஷ் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சென்று விசாரித்தபோது, அது போலியான கடிதம் என்றும், அதுபோன்ற வேலை காலியிடம் இல்லை என்றும் ஆட்சியர் அலுவலகத்தில் தெரிவித்துள்ளனர். இதனால் பணம் கொடுத்து ஏமாற்றமடைந்த ரமேஷ் லட்சுமியிடம் சென்று பணத்தை கேட்டுள்ளார். அப்போது பணம் தர மறுத்ததுடன், குடும்பத்தோடு கொலை செய்து விடுவேன் எனவும் லட்சுமி மிரட்டியதாக தெரிகிறது.

 மனமுடைந்த மலர்க்கொடி நேற்று தனது குழந்தைகளுடன் விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அதிகாரிகள் யாரும் அவரிடம் எந்தவித விசாரணையும் செய்யாமல் இருந்ததால், கையில் வைத்திருந்த மண்ணெண்ணெயை எடுத்து தனது உடலிலும் தனது குழந்தைகள் உடலிலும் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார்.  அங்கிருந்த போலீசார்  மண்ணெண்ணெய் கேனை பிடுங்கி, அவரது உடலில் தண்ணீரை ஊற்றினர்.

தொடர்ந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அரங்கநாதன் விருத்தாசலம் காவல் நிலையத்திற்கு பரிந்துரை செய்து அனுப்பி வைத்தார். தொடர்ந்து சப்- இன்ஸ்பெக்டர் ஆதி மற்றும் போலீசார் இச்சம்பவம் குறித்து மலர்க்கொடியிடம் விசாரணை நடத்திய போது இவர்களிடம் பணம் பெற்ற லட்சுமி பல பேரிடம் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்து, போலீசாரால் விசாரிக்கப்பட்டு வரும் நபர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து மலர்க்கொடியின் புகாரையும் பெற்று வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Vriddhachalam Collector's Office , Vriddhachalam: A woman who tried to set fire with children in front of the Vriddhachalam Collector's Office has caused a stir.
× RELATED விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகம்...