×

புள்ளிங்கோ ஸ்டைலில் பள்ளி வந்த 100 மாணவர்களுக்கு தலைமுடி திருத்தம்: தலைமையாசிரியர் ஏற்பாடு

வேலூர்: வேலூரில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் புள்ளிங்கோ ஸ்டைலில் வந்த 100 மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் சொந்த செலவில் தலைமுடி திருத்தம் செய்தார். தமிழகத்தில் 9, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து வருகிறது. வேலூரில் உள்ள அரசு உதவி பெறும் வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் 540 பேர் படித்து வருகின்றனர். அவர்களில் சிலர் லைன் கட்டிங், டாப் கட்டிங் போன்ற பல்வேறு முறைகளில் சரியான முறையில் தலைமுடியை வெட்டாமல் ஸ்டைலாக வந்துள்ளனர்.

இதனால் பள்ளி நிர்வாகம் சார்பில் மாணவர்களை அழைத்து தலைமுடியை ஒழுக்கமாக வெட்டி வர வேண்டும் என்று பல நாட்களாக அறிவுறுத்தி வந்தது. இதை மாணவர்கள் கடைப்பிடிக்காமல் போக்கு காட்டி வந்தனர். இதற்கிடையே பள்ளி தலைமை ஆசிரியர் நெப்போலியன், ஒழுங்கற்ற முறையில் நேற்று பள்ளிக்கு வந்த 100 மாணவர்களுக்கு 2 தொழிலாளர்கள் மூலம் பள்ளி வளாகத்திலேயே தலைமுடியை திருத்தம் செய்ய ஏற்பாடு செய்தார். இது குறித்து தலைமை ஆசிரியர் நெப்போலியன் கூறுகையில், ‘‘பள்ளிக்கல்வித்துறை உத்தரவின்படி மாணவர்களுக்கு பெற்றோர் ஒத்துழைப்புடன் தலைமுடி திருத்தம் செய்யப்பட்டது. நல்லொழுக்கம் பெற்று நல்ல மாணவர்களாக திகழவேண்டும் என்ற நோக்கத்தில் இதுபோன்ற பணியை தொடங்கினேன். ஒரு மாணவனுக்கு முடி திருத்தம் செய்ய ரூ.60 கட்டணம் கொடுக்கப்படுகிறது. பிளஸ்1 மற்றும் பிளஸ்2 மாணவர்கள் 100 பேருக்கு முடி திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. நாளை(இன்று) 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு இதுபோன்று கட்டிங் செய்யப்படும்’’ என்றார்.

Tags : Pullingo , Hair correction for 100 students who came to the school in Bullingo style: Headmaster arrangement
× RELATED பேருந்து படிக்கட்டுகளில்...