×

பேருந்து படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு செல்லும் ‘புள்ளிங்கோ’ மாணவர்களின் சாகசங்களுக்கு கிடுக்கிப்பிடி: முக்கிய இடங்களில் போலீசார் கண்காணிப்பு, பள்ளி, கல்லூரிகளுக்கு பெயர்களை அனுப்ப முடிவு

சென்னை: அரசு பேருந்துகளின் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணிக்கும் ‘புள்ளிங்கோ’ மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு அந்தந்த பள்ளி, கல்லூரிகளுக்கு பெயர்கள் அனுப்பி வைக்கப்படும் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. பள்ளிகள், கல்லூரிகளில் படிக்கிற சில மாணவர்கள் பொது இடங்களில் பழகும்போதும், பொது ஒழுக்க நடைமுறைகளை பின்பற்றாத நிலை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ரூட் தல போட்டி, பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்வது, பேருந்து செல்லும்ேபாதே படியில் தொடங்கியபடி சாகசங்களில் ஈடுபடுதல், ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ளுதல், பேருந்து கூரையின் மீது அமர்ந்து செல்வது போன்றவற்றில் ஈடுபடுகின்றனர்.

காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் இதுபோன்ற மாணவர்களின் சாகச பயணங்கள், பேருந்துகளில் பயணம் செய்வோரையும் அச்சுறுத்தும் வகையில் அமைந்து விடுகிறது. இதுகுறித்து, போலீசார் பலமுறை நடவடிக்கை எடுத்தாலும், திரும்பவும் அதுபோன்ற நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை புறநகர் பகுதியில் குன்றத்தூரில் பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த ஒரு மாணவன் கீழே விழுந்து அவரது கால்களில் சக்கரங்கள் ஏறி படுகாயம் அடைந்தார். அவர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதில் மாணவனின் இரு கால்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நடந்த சில நாட்களுக்கு முன்புதான் அதே பகுதியில் பேருந்தில் தொங்கியபடி வந்த மாணவர்களை கண்டித்த சினிமா நடிகை ஒருவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மாணவர்களின் இதுபோன்ற பொறுப்பற்ற செயல்களின் மூலம் அவர்கள் பாதிக்கப்படுவதோடு அல்லாமல், அவர்களை நம்பி இருக்கிற பெற்றோர் மற்றும் குடும்பங்கள் பாதிக்கப்படுவதை மாணவர்கள் உணர மறுக்கின்றனர். இதுதொடர்பாக, பள்ளிகளில் ஆசிரியர்கள் அறிவுரை கூறியும் அதை மாணவர்கள் பொருட்படுத்துவதே இல்லை.

பேருந்து பயணங்களில் மாணவர்கள் பாதிக்கப்படுவது குறித்து போலீசார் பலமுறை எச்சரித்துள்ளனர். ஆனாலும் அதுபோன்ற சாகசங்களை தங்களின் ஸ்டைல் என்று நினைத்து செய்து வருகின்றனர். இது பெரும் கவலை அளிக்கும் விஷயமாக தற்போது மாறிவிட்டது. இதை உடனடியாக கவனிக்க வேண்டிய நிலை போக்குவரத்து மற்றும் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, தற்போது சென்னை மாநகர போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

அதாவது மாணவர்கள் அதிக அளவில் அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் தடங்களான கீழ்ப்பாக்கம், நுங்கம்பாக்கம், பெரம்பூர், வியாசர்பாடி, புளியந்தோப்பு, வேளச்சேரி, வேப்பேரி மற்றும் கிண்டி உள்ளிட்ட முக்கிய தடங்களில் போலீசார் அதிக அளவில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு நிறுத்தப்படும் போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதுடன், பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்யும் மாணவர்களை அந்த பேருந்துகளில் இருந்து இறக்கி அவர்களின் விவரங்களை பெற்று, அவர்கள் படிக்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்பி வைப்பார்கள். அந்த விவரங்களை வைத்து கல்வி நிறுவனங்கள் மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் கொடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்துள்ளது.

* இனி கவனம் தேவை
போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கை தற்போது சென்னை நகரில் தொடங்கியுள்ளது. இது விரைவில் மற்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதனால் மாணவர்கள் இனி கவனமுடன் பள்ளிக்கு சென்று வர வேண்டும் என்று போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். அதன் ெதாடர்ச்சியாக பள்ளிக் கல்வித்துறை மற்றும் கல்லூரிக் கல்வி இயக்ககமும் இந்த பணியில் கைகோர்த்துள்ளது. இதுபோன்ற பிரச்னைகளில் சிக்கும் மாணவர்கள் மீது உடனடியாக அந்தந்த கல்வி நிறுவனங்களும் நடவடிக்கையில் இறங்க உள்ளன. எனவே, மாணவர்களே உஷார்!

The post பேருந்து படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு செல்லும் ‘புள்ளிங்கோ’ மாணவர்களின் சாகசங்களுக்கு கிடுக்கிப்பிடி: முக்கிய இடங்களில் போலீசார் கண்காணிப்பு, பள்ளி, கல்லூரிகளுக்கு பெயர்களை அனுப்ப முடிவு appeared first on Dinakaran.

Tags : Pullingo ,Kikidipidi ,Chennai ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...