9 மாவட்டங்களை தவிர்த்து 28 மாவட்டங்களில் அக்.2ல் கிராமசபை கூட்டம்: தமிழக அரசு உத்தரவு; வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சென்னை: தமிழகத்தில் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று. உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களை தவிர்த்து, 28 மாவட்டங்களில் கிராமசபை கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடித்து கூட்டத்தை நடத்த அறிவுறுத்தியுள்ளது. குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம் மற்றும் காந்தி ஜெயந்தி ஆகிய நாட்களில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்படும். குறிப்பாக, ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வை ஊக்குவித்தல், வளர்ச்சி திட்டங்களை திட்டமிடுதல், செயல்படுத்துதல், ஊராட்சி நிர்வாகத்தில் பொதுமக்களின் பங்களிப்பை மேம்படுத்துதல் மற்றும் சமூக தணிக்கைக்கு வழி வகுத்தல் உள்ளிட்டவை கிராம சபைக் கூட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

கிராம மக்களின் கையில் இருக்கும் அதிகாரமாக கிராம சபைக் கூட்ட நடவடிக்கைகள் இருக்கிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பிறகு குறிப்பாக ஓராண்டிற்கு மேலாக தமிழகத்தில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படவில்லை. இந்நிலையில், அடுத்த மாதம் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களை தவிர்த்து, ஏனைய 28 மாவட்டங்களில் கொரோனா தடுப்பு வழிமுறைகளை கண்டிப்புடன் கடைபிடித்து கிராம சபை கூட்டங்களை நடத்த வேண்டும் என தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது.

இதுகுறித்து, தமிழக அரசு நேற்று வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:

* ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்கள் நீங்கலாக மற்ற 28 மாவட்டங்களில் கிராம சபை கூட்டம் நடைபெறும். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாவட்ட கலெக்டர்கள் கிராம சபை கூட்டங்களை நடத்த உத்தரவிட வேண்டும்.

* கிராமங்களில் உள்ள மக்கள்தொகை அடிப்படையில் முன்கூட்டியே கிராம சபை கூட்டம் நடத்துவதற்கான இடத்தை தேர்வு செய்ய வேண்டும். திறந்தவெளியில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.

* கிராம சபை கூட்டங்களை நடத்துவதற்கு முன்பாக அப்பகுதி சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

* பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் திறந்த வெளியில் பந்தல்களை அமைத்து கூட்டம் நடத்த வேண்டும்.

* கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பாக கலந்துகொள்ள வரும் அனைவருக்கும் வெப்ப அளவீட்டு கருவி மூலம் உடல் வெப்பநிலை சோதனை செய்ய வேண்டும். யாருக்கேனும் அதிகமாக வெப்பநிலை தென்பட்டால் அவர்களை கூட்டத்தில் அனுமதிக்கக்கூடாது. 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை கூட்டத்தில் அனுமதிக்கக்கூடாது.

* சமூக இடைவெளியை கடைபிடித்து ஒவ்வொருவருக்கும் இடையில் 6 அடி இடைவெளியுடன் அமர வேண்டும்.

* காய்ச்சல், இருமல் போன்ற கொரோனா அறிகுறி தென்படும் நபர்களை கூட்டத்திற்கு அனுமதிக்கக்கூடாது. இதேபோல், கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களையும் கூட்டத்தில் அனுமதிக்கக்கூடாது.

* கலந்துகொள்பவர்கள் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். அக்டோபர் 2ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையில் கூட்டம் நடத்தப்பட வேண்டும். நேரத்தை நீட்டிப்பது குறித்து ஆலோசனை செய்து கிராம சபையினர் முடிவெடுத்துக்கொள்ளாலாம்.

* கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் கிராம சபை கூட்டங்களை பின்னர் நடத்திக்கொள்ளலாம். மேலும், கிராம சபை கூட்டங்கள் குறித்த நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் சரியான நேரத்தில் உடனுக்குடன் அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>