×
Saravana Stores

ருதுராஜ், ஜடேஜா, பிராவோவின் ஆட்டத்தால் வெற்றி: கேப்டன் டோனி பேட்டி

துபாய்: துபாயில் நேற்று இரவு நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த சி.எஸ்.கே. 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் சேர்த்தது. தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டமிழக்காமல் 58 பந்தில் 88 ரன்கள் விளாசினார். ஒரு கட்டத்தில் 24 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து தவித்த சி.எஸ்.கே.வை ஜடேஜா, ருதுராஜ், பிராவோ ஆகியோர் மீட்டனர். இதைத்தொடர்ந்து 157 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களம் இறங்கியது.

தொடக்க வீரர்கள் குயின்டான் டி காக் 17 ரன்னிலும், அன்மோல்ப்ரீத் சிங் 16 ரன்னிலும் அவுட் ஆகினர். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் (3 ரன்), இஷான் கிஷன் (11 ரன்) ஆகியோரும் சோபிக்கவில்லை. இதனால் மும்பை இந்தியன்ஸ் 58 ரன்னுக்குள் 4 விக்கெட்டை இழந்தது. கேப்டன் பொல்லார்டும் 15 ரன்னில் வெளியேற சென்னை வீரர்கள் உற்சாகமடைந்தனர். சவுரப் திவாரி கடைசி வரை அணியின் வெற்றிக்காக போராடினார். கடைசி இரண்டு ஓவரில் 39 ரன்கள் தேவைப்பட்டது. சர்துல் தாகூர் 19வது ஓவரை வீசினார்.

அதில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன் 15 ரன் கிடைத்தது. கடைசி ஓவரில் 24 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அந்த ஓவரை பிராவோ வீசினார். இந்த ஓவரில் பிராவோ 3 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். இதனால் மும்பை அணி 136 ரன்கள் மட்டுமே எடுத்தது. சி.எஸ்.கே. 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் 8 போட்டிகளில் விளையாடி 6-ல் வெற்றி பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.

வெற்றி குறித்து சி.எஸ்.கே. கேப்டன் டோனி கூறுகையில், ‘‘30 ரன்களுக்கு 4 விக்கெட் என அணி இக்கட்டான நிலையில் இருந்த போது, அனைவரும் ஏதோ ஒரு மரியாதையான ஸ்கோர் இருந்தால் போதும் என்று நினைத்தோம். ஆனால் ருதுராஜும், பிராவோவும் நாங்கள் நினைத்ததை விட நல்ல ஸ்கோரை பெற்றுத் தந்தனர். 140 ரன்கள் எடுத்தால் நல்லது என்று நினைத்தோம். ஆனால் 156 ரன்கள் என்பது நாங்கள் எதிர்பாராத ஒன்றுதான். ஆடுகளம் மந்தமாக இருந்தது. நான் 9வது ஓவருக்கு மேல் அடித்து விளையாடலாம் என்று எண்ணியிருந்தேன்.

ஆனால் ஆடுகளத்தின் தன்மையை புரிந்து கொள்வதற்கு முன்னால் ஆட்டமிழந்து விட்டேன். ருதுராஜ் நிலைத்து நின்று ஆட, அவருக்கு துணையாக ஜடேஜாவும், பிராவோவும் சேர்ந்து அணிக்கு மதிப்பான ஸ்கோரை பெற்றுத் தந்தனர்’’ என்று தெரிவித்தார். கிரன் போலார்ட் கூறுகையில், ‘‘எங்களுக்கு நல்ல பார்ட்னர்ஷிப் அமையவில்லை. பவர் பிளேயில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறி கொடுத்தோம். தவிர பந்துவீச்சில் கடைசி ஓவர்களில் நாங்கள் அதிக ரன்களை விட்டுக் கொடுத்தோம். தேவையில்லாமல் கூடுதலாக 20 ரன்களை விட்டுக் கொடுத்தோம். அந்த ரன்கள் வித்தியாசத்தில்தான் தோல்வியடைந்திருக்கிறோம்’’ என்று தெரிவித்தார்.

Tags : Rudraj ,Jadeja ,Bravo ,Tony , Rudraj, Jadeja, Bravo win the game: Interview with Captain Tony
× RELATED அடுத்தடுத்து 6 விக்கெட் – தடுமாறும் இந்தியா