×

காளையார்கோவிலில் குளத்தில் கொட்டப்படும் குப்பைகள்-சுத்தமாக பராமரிக்க பக்தர்கள் கோரிக்கை

காளையார்கோவில் : காளையார்கோவிலில் உள்ள வாள்மேல் நடந்த அம்மன் கோவில் தெப்பக்குளம் போதிய பராமரிப்பு இல்லாததால் தண்ணீர் பச்சைநிறமாக மாறி வருகின்றது.
காளையார்கோவிலில் உள்ள வாள்மேல் நடந்த அம்மன் கோவில் தெப்பக்குளத்தைச் சுற்றி கருவேலமரங்கள் இருப்பதால் குளத்தின் சுவர்களில் உள்ள பாறைகள் பெயர்ந்து விழும் நிலையில் உள்ளன. மேலும் குப்பை கழிவுகள் குளத்தில் கொட்டப்படுவதால் துர்நாற்றம் ஏற்படுகிறது.

இதனால் கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் முகம் சுழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பகல் மற்றும் இரவு நேரங்களில் அப்பகுதியில் குடிமகன்கள் மது அருந்திவிட்டு பிளாஸ்டிக் கப் மற்றும் பைகளை குளத்திற்குள் வீசிவிட்டுச் சென்று விடுகின்றனர். இந்நிலையில் தற்போது போதிய மழை இல்லாததால் குளத்தில் தண்ணீர் வற்றி வருகின்றது. தண்ணீரில் மிதக்கும் பிளாஸ்டிக் கழிவுகளால் துர்நாற்றம் வீசுகின்றது. எனவே குளத்தை தூர்வார வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பக்தர்கள் கூறுகையில், அம்மன் குளத்து தண்ணீரைதான் சில ஆண்டுகளுக்கு முன் காளையார்கோவில் பகுதியில் உள்ள மக்கள் குடிநீராக பயன்படுத்தி வந்தனர். சிறு மழை பெய்தால் கூட குளத்திற்கு தண்ணீர் வந்து விடும். ஆனால் இப்போது பெரிய மழை பெய்தாலும் தண்ணீர் வருவது கடினமாக உள்ளது. அம்மன் குளத்திற்கு தண்ணீர் வரும் வாய்க்கால்களை பொதுமக்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

மேலும் கழிவுநீர் குப்பைகளை கொட்டி விடுகின்றனர். மழைக்காலங்களில் அனைத்தும் குளத்திற்குள் வந்து விடுவதால் சுகாதாரமற்ற நீராக மாறிவிட்டது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தில் ஆக்கிரமிப்பை அகற்றி சுத்தம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : DeVos ,Bullercoville , Kalayarkovil: Sword-wielding Amman Temple Teppakulam in Kalayarkovil water due to lack of maintenance
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சேரும்...