பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகரில் குடியிருப்புகள் அதிகம் நிறைந்த இடங்களில் ஒன்றான மகாலிங்கபுரம் உள்ளது. இதன் ஒரு பகுதியில், நகராட்சிக்கு சொந்தமான மைதானம் உள்ளது. பரந்து விரிந்த இடமான இந்த மைதானத்தில், சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை பொதுக்கூட்டம் மற்றும் கலை நிகழ்ச்சி நடைபெறும் இடமாக இருந்தது. மேலும், ஒவ்வொரு ஆண்டும் அடிக்கடி சர்க்கஸ் நடைபெறுவதால், இதற்கு சர்க்கஸ் மைதானம் என நாளடைவில் அழைக்கப்பட்டு வருகிறது. மேலும், அரசு சம்பந்தமான நிகழ்ச்சிகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், பொருட்காட்சி நடைபெற்று வந்துள்ளது.
ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பிருந்து இந்த மைதானத்தை முறையாக சீர்படுத்தாமல் குறிப்பிட்ட சில பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மட்டும் நடைபெற்று வந்துள்ளது. பின், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நகரில் பாதாள சாக்கடை பணி துவங்கப்பட்டவுடன், அப்பணிக்காக குழிதோண்டி தேவையற்ற மண் மற்றும் நகரின் பல்வேறு பகுதியிலிருந்து கட்டிட கழிவுகள் கொட்டும் இடமாக மாறியது. அதிலும் கடந்த சில மாதமாக, அந்த மைதானத்தின் பெரும் பகுதியில் குவியலாக மண், கட்டிட கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதால், மைதான பகுதி பொலிவிழந்துள்ளது. தற்போது சர்க்கஸ் மைதானத்தின் 80 சதவீத இடத்தில், மணல் மேடாக இருப்பதால், எந்தவித பொழுதுபோக்கு நிகழ்ச்சியோ, அரசு சம்பந்தமான விழாக்களோ நடப்பது இல்லை.
சுமார் 50 அண்டுகளுக்கு மேலாக பல்வேறு நிகழ்ச்சிக்கு பயன்பெற்று வந்த நகராட்சி சர்க்கஸ் மைதானத்தின் அவலத்தை பார்த்து பொதுமக்கள் வேதனையடைந்துள்ளனர். நகரில் குடியிருப்பு, போலீஸ் நிலையம், கல்லூரிகள் அருகே உள்ள நகராட்சி மைதானம் நாளடைவில் மறைந்து போகுமோ? என்ற வேதனை ஏற்பட்டுள்ளது. எனவே, மகாலிங்கபுரத்தில் நகராட்சிக்குட்பட்ட இடத்தில் உள்ள கட்டிடக்கழிவுகளை வேறு பகுதிக்கு அப்புறப்படுத்தி சுத்தப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.