ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, கனடாவில் அதிமுக மாஜி அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொத்து: திடுக்கிடும் தகவல் அம்பலம்

வேலூர்: வருமானத்துக்கு அதிகமான சொத்து குவித்த வழக்கில் மாஜி அமைச்சர் கே.சி.வீரமணியின் வீடு, நிறுவனங்கள் மற்றும் அவரது உறவினர்கள், பினாமிகளின் வீடுகளில் நடந்த ரெய்டை தொடர்ந்து, 2வது கட்டமாக அவரது நெருங்கிய விசுவாசிகளின் பட்டியலை கையில் எடுக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்துள்ளனர். கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்கள் வருமானத்துக்கு அதிகமான சொத்து குவித்ததாக பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் எஸ்.பி.வேலுமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோரை தொடர்ந்து முன்னாள் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணியின் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தொடர்ந்து நேற்று முன்தினம் ஜோலார்பேட்டை, ஏலகிரி, ஓசூர், பெங்களூரு, சென்னை உட்பட 35க்கும் மேற்பட்ட இடங்களில் கே.சி.வீரமணி மற்றும் அவரது உறவினர்கள், பினாமிகளின் வீடு, நிறுவனங்கள், அலுவலகங்கள், ஓட்டல்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களையும், கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க்குகளையும் கைப்பற்றினர். இந்த சொத்து ஆவணங்களுடன், 2011ம் ஆண்டுக்கு முந்தைய அவரது சொத்து மற்றும் வருவாய் இனங்களை ஒப்பிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். இதற்கிடையில் ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, கனடா போன்ற வெளிநாடுகளில் கே.சி.வீரமணி மற்றும் அவரது உறவினர்களின் பெயரில் சொத்துக்கள் மற்றும் நிறுவனங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

இதன் விவரங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் திரட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக ஆப்பிரிக்க நாடு ஒன்றில் வாங்கிய பெரிய நிறுவனம் தொடர்பான விவரங்களையும், ஆஸ்திரேலியாவில் அவரது உறவினரின் மேற்பார்வையில் நடந்து வரும் தொழில் தொடர்பான விவரங்களையும் முழு அளவில் திரட்டி வருகின்றதாக கூறப்படுகிறது. இதேபோல் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கே.சி.வீரமணியின் தீவிர விசுவாசிகளாக பலர் உள்ளனர். அவர்களையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இன்னும் சில தினங்களில் கே.சி.வீரமணியின் விசுவாசிகள் சிலரது வீடுகள் மற்றும் நிறுவனங்களில் ரெய்டு நடத்தப்படலாம் எனவும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Related Stories: