மம்தா ‘தலை’க்கு 11 லட்சம் அறிவித்த பாஜக நிர்வாகி கைது: உ.பி-யில் வீடு புகுந்து தூக்கிய மேற்குவங்க போலீசார்

அலிகார்: முதல்வர் மம்தாவின் தலைக்கு ரூ. 11 லட்சம் தருவதாக கூறிய உத்தரபிரதேச பாஜக நிர்வாகியை, மேற்குவங்க போலீசார் நேற்றிரவு அவரது வீட்டிற்கு சென்று கைது செய்தனர். மேற்குவங்க மாநிலம் வீர்பூமி மாவட்டத்தில் கடந்த 2017ம் ஆண்டு  அனுமன் ஜெயந்தி ஊர்வலம் சென்ற போது, குறிப்பிட்ட இரு அமைப்பினர் இடையே  மோதல் ஏற்பட்டது. அப்போது வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் லத்தி சார்ஜ்  செய்தனர். அதில், உத்தரபிரதேச மாநிலம் அலிகாரை சேர்ந்த பாஜக நிர்வாகி  யோகேஷ் வர்ஷினி காயமடைந்தார். அப்போது அவர், ‘முதல்வர் மம்தா பானர்ஜியின்  ‘தலை’யை கொண்டு வருவோருக்கு ரூ.11 லட்சம் வெகுமதி அளிக்கப்படும்’என அறிவித்தார். இவரது பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், இந்த  விவகாரம் நாடாளுமன்றம் வரை சென்றது.

இந்நிலையில், மேற்குவங்க போலீசார் நேற்றிரவு அலிகார் அடுத்த காந்திநகரில் உள்ள பாஜக நிர்வாகி யோகேஷ் வர்ஷினியின் வீட்டிற்கு வந்தனர். அவர்கள், சீருடையில் வரவில்லை. வீட்டில் இருந்தவர்கள், போலீசார் குறித்து விசாரித்த போது இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் மேற்குவங்க போலீசாருக்கும், அந்த குடும்பத்தினருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. அதன்பின் வீட்டின் மாடியில் தங்கியிருந்த யோகேஷ் வர்ஷினியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பதற்றத்தை தொடர்ந்து, அங்கிருந்து யோகேஷ் வர்ஷினியை போலீசார் அழைத்து சென்றனர்.

Related Stories:

More
>