ஆந்திரா, தெலங்கானா கர்நாடகா உட்பட 8 உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள்: கொலிஜியம் பரிந்துரை

புதுடெல்லி: அலகாபாத், கர்நாடகா உள்பட 8 உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகளை நியமிக்க, ஒன்றிய சட்ட அமைச்சகத்துக்கு உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா பதவியேற்ற பின் நாடு முழுவதும் உயர் நீதிமன்றங்களில் காலியாக இருக்கும் நீதிபதிகள் பதவியை நிரப்பி வருகிறார். சமீபத்தில் இந்திய பார்கவுன்சில் நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பேசுகையில், ‘உயர் நீதிமன்றங்களில் காலியாக உள்ள நீதிபதி பதவிகளை விரைவாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்று கூறினார்.

இந்நிலையில், தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் யு.யு.லலித், ஏ.எம்.கான்வில்கார் அடங்கிய உச்ச நீதிமன்றத்தின் 3 நபர் கொலிஜியம் குழு தொடர்ந்து ஆலோசனை நடத்தி அலகாபாத், கர்நாடகா, கொல்கத்தா, ஆந்திரா, தெலங்கானா, மேகாலயா, குஜராத், மத்திய பிரதேச உயர் நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகளாக நியமிக்க 8 பேரின் பெயரை ஒன்றிய சட்ட அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்துள்ளது. அதன்படி, அலகாபாத்- ராஜேஷ் பின்தால், கொல்கத்தா- பிரகாஷ் வத்சவ், ஆந்திரா- பிகே மிஸ்ரா, கர்நாடகா- ரித்துராஜ் அஸ்வதி, தெலங்கானா- சதீஷ் சந்திர சர்மா, மேகாலயா- ரஞ்சித் வி மோர், குஜராத்- அரவிந்த் குமார், மத்தியப் பிரதேசம்- ஆர்.வி.மலிமத் ஆகியோரை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.

இதனை ஒன்றிய சட்ட அமைச்சகம் பரிசீலித்து ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பும். இதே போன்று சில நீதிபதிகளை வேறு மாநில உயர் நீதிமன்றங்களுக்கும் இடமாற்றம் செய்தும் கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. உயர் நீதிமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் இவ்வளவு தலைமை நீதிபதிகளை கொலிஜியம் பரிந்துரை செய்திருப்பது இதுவே முதல்முறை.

Related Stories:

>