திருத்தணி சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் அன்பின் ருசியோடு முப்பொழுதும் அன்னதானம்: அமைச்சர் சா.மு.நாசர் பக்தர்களுக்கு உணவுகளை பரிமாறினார்

திருத்தணி: திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோயிலில் அன்பின் ருசியோடு முப்பொழுதும் அன்னதானம் திட்டம் தொடங்கப்பட்டது. இதில், அமைச்சர் சா.மு.நாசர் கலந்து கொண்டு, பக்தர்களுக்கு உணவுகளை பரிமாறினார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் இந்து சமய அறநிலையத்துறை சார்பில், திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோயிலில் முப்பொழுதும் அன்னதானத் திட்டத்தினை தொடங்கி வைத்தார். இதைதொடர்ந்து, திருத்தணி சுப்பரமணிய சுவாமி கோயிலில் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் ஆகியோர் பக்தர்களுக்கு உணவுகளை பரிமாறினர். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது.

தமிழ்நாடு முதலமைச்சரால் தமிழகம் முழுவதும் இருக்கும் பல்வேறு திருத்தலங்களிலும் அனைவருக்கும் இலவசமாக உணவு வழங்கும் விதமாக முப்பொழுதும் அன்னதான திட்டத்தை அறிவித்து, இன்று தொடங்கப்பட்டது. அதன்படி திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா உள்பட அனைத்து பகுதிகளில் இருந்து வரும் பக்தர்களின் மனமும், வயிறும் குளிரும் வகையில் அனைவருக்கும் பொதுவான முப்பொழுதும் அன்னதான திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் தினமும் சுமார் 3000 பக்தர்கள் பயனடைவார்கள்.

இந்த திட்டம் ஆண்டின் 365 நாட்களும் முழுமையாக நடைபெறும். எனவே, முப்பொழுதும் - எப்பொழுதும் பக்தி பசியோடு வருவோருக்கு அன்பின் ருசியோடு அன்னதானம் வழங்கப்படும். இத்திட்டத்தை அனைத்து பக்தர்களும் முழுமையாக பயன்படுத்தி பயனடைய வேண்டும் என்றார். நிகழ்ச்சியில், ச.சந்திரன், வி.ஜி.ராஜேந்திரன், ஆ.கிருஷ்ணசாமி, மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் எம்.பூபதி, கோயில் இணை ஆணையர் கே.ரமணி, இணை ஆணையர் தக்கர் சி.லட்சுமணன், திமுக நகர செயலாளர் வினோத் குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: