புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு!: நாள்தோறும் 15,000 பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி..!!

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மாதாந்திர வழிபாட்டிற்காக இன்று திறக்கப்பட்டுள்ள நிலையில், நாளை முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். கொரோனா பரவல் காரணமாக 7 மாதங்களாக சபரிமலையில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைக்கிறார்.

வருகின்ற 21ம் தேதி வரை கோவிலில் பூஜைகள் நடைபெற உள்ளன. வழிபட விரும்பும் பக்தர்கள் இணையவழியில் பதிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ள தேவஸ்தானம் போர்ட், கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு காரணமாக நாள்தோறும் 15 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்க முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழிபாட்டிற்கு வரும் பக்தர்கள் 48 மணி நேரத்திற்கு முன் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையின் கொரோனா நெகட்டிவ் சான்று அல்லது தடுப்பூசிகளின் இரு தவணையும் செலுத்தி கொண்டதற்கான சான்றை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். சபரிமலை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு கடந்த 8ம் தேதி தொடங்கி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More
>