×

மேட்ரிமோனியல் மூலம் 2வது திருமணத்தை எதிர்நோக்கும் பெண்ணை குறிவைத்து தமிழகம் முழுவதும் 32 பெண்களிடம் ரூ1.50 கோடி மோசடி: கைதான 2 நைஜீரியர்கள் பரபரப்பு வாக்குமூலம்

சென்னை: மேட்ரிமோனியல் மூலம் 2வது திருமணத்தை எதிர்நோக்கும் பெண்களை குறிவைத்து, தமிழகம் முழுவதும் 32 பெண்களிடம் ரூ1.50 கோடி பணம் மோசடி செய்ததாக கைதான 2 நைஜீரிய வாலிபர்கள் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் தலைமைறைவாக உள்ள பெண் உட்பட 5 பேரை கைது செய்ய தனிப்படை டெல்லி விரைந்துள்ளது. சென்னை பெரம்பூரை சேர்ந்த 45 வயது ெபண் மறுமணம் செய்ய முடிவு செய்தார். அதற்காக, அவர் இணையதள உதவியுடன் மேட்ரிமோனியல் மூலம் வரன் பார்த்துள்ளார். அப்போது, நெதர்லாந்தில் டாக்டராக பணியாற்றுவதாக முகமது சலீம் என்ற பெயரில் அவரின் விபரங்கள் இருந்தது.

உடனே சலீம் என்ற நபருக்கு வாட்ஸ் அப் மூலம் கால் செய்து பேசியுள்ளார். அப்போது சலீம் என்பவர் உங்களை நான் திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி அதற்கு அடையாளமாக விலை உயர்ந்த வைர நகைகள் அடங்கிய பரிசு அனுப்பி இருப்பதாக கூறி ரூ4.40 லட்சம் பணத்தை சிறுக சிறுக ஏமாற்றி மோசடி செய்துள்ளார். ஒரு கட்டத்தில் சந்தேகமடைந்த பெண் சம்பவம் குறித்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில், அப்போது மேட்ரிமோனியில் வெளிநாட்டில் வரன் தேடிய பெண்ணின் விபரங்களை சேகரித்து போலியாக நெதர்லாந்து நாட்டு டாக்டர் முகமது சலீம் என்று புகைப்படத்தை அனுப்பி பணம் பறித்தது நைஜீரியா கும்பல் என தெரியவந்தது. அதை தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் செல்போன் மற்றும் வங்கி கணக்கு விபரங்களை வைத்து டெல்லி போலீசார் உதவியுடன் டெல்லி உத்தம் நகரில் வீடு   பதுங்கி இருந்த நைஜீரியா நாட்டை சேர்ந்த பாலினஸ் சிகேலுவோ(31), சிலிட்டஸ் இகேசுக்வு(23) ஆகிய இரண்டு கடந்த 3ம் தேதி கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து  10 ஏடிஎம் கார்டுகள், 15 செல்போன்கள், 4 லேப்டாப்புகள், ரூ4.30 லட்சம் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட நைஜீரியாவை சேர்ந்த சிகேலுவோ மற்றம் சிலிட்டஸ் இகேசுக்வு ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 3 நாள் காவல் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் ேநற்று 2 நைஜீரியர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள பெண் உட்பட 5 பேரை பிடிக்க தனிப்படை போலீசார் டெல்லி விரைந்துள்ளனர். கைது செய்யப்பட்ட 2 நைஜீரியர்கள் 3 நாள் காவலில் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது: ‘மேட்ரிமோனியல் மோசடியில் ஈடுபட நைஜீரியா நாட்டில் இருந்து இந்தியாவுக்கு சுற்றுலா விசா மற்றும் மாணவர்கள் விசா மூலம் வந்து, சாலையோரம் நடைபாதையில் வசிக்கும் நபர்களுக்கு பணம் கொடுத்து அவர்கள் முகவரி பெயரில் வங்கி கணக்கு மற்றும் செல்போன் சிம்கார்டுகள் வாங்கி இந்த மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

மேலும், மேட்ரிமோனியல் மூலம் 2வது திருமணம் செய்ய விரும்பும் பெண்களை மேட்ரிமோனியல் வெப்சைட் மூலம் நேரடியாக தொடர்பு கொண்டு வெளிநாட்டில் டாக்டர், இன்ஜினியர் என்று வேறு ஒருவரின் புகைப்படத்தை வைத்து மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதுபோல் தமிழகம் முழுவதும் 32 பெண்களை ஏமாற்றி ₹1.50 கோடி பணம் மோசடி செய்துள்ளனர். இந்த மோசடியில் நைஜீரியாவை சேர்ந்த பெண் உட்பட 7 பேர் ஈடுபட்டதாக கைது ெசய்யப்பட்ட 2 நைஜீரியர்கள் வாக்கு மூலம் அளித்தனர். இவ் வாறு போலீசார் தெரிவித்தனர்.

Tags : Tamil Nadu ,Nigerians , 1.50 crore scam against 32 women across Tamil Nadu for targeting 2nd marriage through matrimonial: 2 Nigerians arrested for making sensational confession
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...