×

ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருவதால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் ஆண்டிபட்டி: புறவழிச்சாலை அமைக்க கோரிக்கை

ஆண்டிபட்டி:  தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் ஆண்டிபட்டியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி, வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே, புறவழிச்சாலை அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.தேனி மாவட்டத்தில் மதுரை-கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் ஆண்டிபட்டி பேரூராட்சி அமைந்துள்ளது. நகரில்  கொண்டமநாயக்கன்பட்டியில் இருந்து தாலுகா அலுவலகம் வரை 2 கி.மீ தூரம் உள்ள மெயின் ரோடு நகரின் முக்கிய பகுதியாக உள்ளது. குமுளி, கம்பம், போடி ஆகிய நகரங்களில் இருந்து மதுரை மற்றும் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் ஆண்டிபட்டி வழியாக சென்று வருகின்றன. தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், சாலையின் இருபுறமும் பள்ளிகள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், நகைக்கடைகள், பலசரக்கு கடைகள் அமைந்துள்ளன. சாதாரண நாட்களில் காலை, மாலை வேளைகளில் பள்ளி நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். விசேஷ காலங்கள், முகூர்த்த காலங்களில் வாகனங்கள் ஊர்ந்து செல்கிற அளவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இந்த சமயங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்களும் சிக்கி தவிக்கும். பொதுமக்கள் சாலையை கடக்க அரை மணி நேரத்துக்கு மேலாக காத்திருக்கும் நிலை ஏற்படும். போக்குவரத்து போலீசாரும் நெரிசலை ஒழுங்குபடுத்த முடியவில்லை.

புறவழிச்சாலை கட்டாயம் தேவை : நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என 10 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், முந்தைய அதிமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போதைய திமுக அரசு மக்களுக்கு நல்ல பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. எனவே, நகரில் புறவழிச்சாலை திட்டத்தையும் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், அதிகாரிகள் புறவழிச்சாலைக்கு ஏற்கனவே அளவீடு செய்த இடத்தை விட்டுவிட்டு, தற்போது ரயில்பாதை அருகே இதற்கான அளவீடு பணிகள் நடந்து வருவதாக தெரிகிறது. இது புறவழிச்சாலைத் திட்டத்தை போக்குக் காட்டும் விதமாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, ஆண்டிபட்டியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Andipatti: Traffic jam due to thousands of vehicles passing by: Demand for construction of bypass
× RELATED அறிவியல்பூர்வ ஆய்வு நடத்தாமல்...