×

நீட் தேர்வுக்கு எதிராக புதிய மசோதா பேரவையில் நிறைவேற்றம்: பாரதிய ஜனதா வெளிநடப்பு; அனைத்து கட்சிகளும் ஆதரவு

சென்னை: மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆகிய இளநிலை படிப்பில் அரசு ஒதுக்கீடு இடங்கள், தனியார் மருத்துவ கல்லூரிகளில்  அரசு ஒதுக்கீடு செய்யும் இடங்கள் ஆகியவற்றிற்கு 12ம் வகுப்பு தேர்வு  மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த புதிய சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் அனைத்துக்கட்சி ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று ‘நீட்’ தேர்வு குறித்த சட்டமுன்வடிவினை முன்மொழிந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தொடக்கத்தில் இருந்தே நீட் தேர்வை திமுக எதிர்த்து வருகிறது. ஏனென்றால், மாணவர்களுக்கு கல்வி தடையை ஏற்படுத்தக்கூடிய நுழைவு தேர்வுக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைத்த அரசுதான் திமுக அரசு. மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆகிய இளநிலை மருத்துவ கல்வி சேர்க்கைகளை, இனிமேல் 12ம் வகுப்பு தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் நடத்துவதற்கு ஏதுவாக, வலிமையான சட்டமுன்வடிவினை இப்பேரவையில் முன்மொழிகிறேன்.

நீட் தேர்வால் சமுதாயத்தில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிந்து அறிக்கை சமர்ப்பித்திட ஓய்வு பெற்ற நீதிபதி டாக்டர் ஏ.கே.ராஜன் தலைமையில் ஒரு குழுவை அமைத்தோம்.  தனது விரிவான பரிந்துரைகளை நீதிபதி ஏ.கே.ராஜன் குழு 14-7-2021 அன்று அரசுக்கு அளித்தது. அந்த பரிந்துரைகளில் சமுதாயத்தில் பின்தங்கியோர் மருத்துவ கல்வியை பெறும் கனவிற்கு இடையூறாகவும், சமூக பொருளாதாரத்தில் வளமிகுந்த பிரிவினருக்கு சாதகமாகவும் இருந்து, எம்.பி.பி.எஸ் மற்றும் உயர் மருத்துவ படிப்புகளில் உள்ள பலதரப்பட்ட சமூக பிரதிநிதித்துவத்தை நீட் தேர்வானது குறைத்துள்ளது என்று தெரிவித்துள்ளது.

குறிப்பாக, அரசு பள்ளியின் மாணவர்கள், பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கும் குறைவாக கொண்டுள்ளவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர் மற்றும் பட்டியலின பழங்குடியினர் போன்ற பிரிவுகளை சேர்ந்த வசதி குறைந்தவர்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும், எம்பிபிஎஸ் மாணவர்களின் தகுதி அல்லது தரத்தினை நீட் தேர்வு உறுதிசெய்வதாக தெரியவில்லை எனவும், ஒப்பிடுகையில், குறைந்த செயல்திறன் கொண்ட (தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு மதிப்பெண்கள்  மற்றும் மேனிலை மதிப்பெண்களில்) மாணவர்கள் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்க்கை பெறுவதற்கு மட்டுமே தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு புகுத்தியுள்ளது எனவும் அறிக்கை முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

 ஆகவே, 2006ம் ஆண்டு தமிழ்நாடு தொழிற்சார் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை சட்டத்தை போன்றதொரு சட்டத்தை மாநில அரசு நிறைவேற்றி, அதற்காக குடியரசு தலைவருடைய ஒப்புதலை பெறலாம் என்றும் இந்த குழு பரிந்துரை செய்துள்ளது. இந்த உயர்மட்ட குழு அளித்த விரிவான பரிந்துரைகளை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள, தலைமை செயலாளர் தலைமையில் அரசு செயலாளர்களை கொண்ட குழு ஒன்று 15-7-2021 அன்று அமைக்கப்பட்டது. செயலாளர்கள் குழு, 2007ல் தமிழ்நாடு அரசால் இயற்றப்பட்ட சட்டத்தை போன்று மருத்துவ கல்வி சேர்க்கைக்கு நீட் தேர்வினை விலக்குவதற்கான காரணத்தை குறிப்பிட்டு சட்டம் இயற்றி, சட்டமன்ற பேரவையின் ஒப்புதல் பெற்று, அதற்கு குடியரசு தலைவருடைய ஒப்புதல் பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

நீட் தேர்வானது மருத்துவ கல்வியின் தரத்தை மேம்படுத்துகிறது என்பதும் தவறானதே. 2017ம் ஆண்டிற்கு முன்பிருந்தே அதிக மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கல்வி நிறுவனங்களை கொண்டுள்ள மாநிலங்களுள் தமிழ்நாடு ஒன்றாக இருந்தது. இந்த நிறுவனங்களிடம் இருந்து பட்டம் பெற்ற மருத்துவர்கள் மற்றும் பல் மருத்துவர்கள் மிகவும் திறமை வாய்ந்தவராக விளங்கினர். எனவே, மேல்நிலை பள்ளி பாடத் திட்டம் போதுமான தரத்தில் இருக்கும் சூழலில், தகுதி தேர்வின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் சேர்க்கையானது எந்த வகையிலும் கல்வியின் தரத்தை குறைத்துவிடாது.

மேலும், பள்ளி தேர்வு மதிப்பெண்கள் நெறிப்படுத்துதல் முறை மூலமாக சரிசெய்யப்பட்டால் அது முறையான, நியாயமான மற்றும் நடுநிலையான சேர்க்கை முறையை வழங்கும். மருத்துவ கல்விப் படிப்புகளுக்கான சேர்க்கையினை இந்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையின் மூன்றாவது பட்டியலில் 25வது உள்ளீட்டில் காணலாம். எனவே, மாநில அரசானது அதை முறைப்படுத்த தகுதியுடையது. ஆகவே, இன்று என்னால் இந்த சட்டமுன்வடிவு அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த புதிய சட்டமுன்வடிவில், மருத்துவ இளநிலைப் படிப்பில் அரசு ஒதுக்கீடு இடங்கள், தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு செய்யும் இடங்கள் ஆகியவற்றிற்கு 12ம் வகுப்பு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்த முன்மொழியப்படுகிறது.

மேலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத முன்னுரிமை ஒதுக்கீடு செய்யவும் முன்மொழியப்படுகிறது. உயர்மட்ட குழுவின் பரிந்துரையை கவனமாக பரிசீலித்த பின்பு, சமூகநீதியை உறுதிசெய்யவும், சமத்துவம் மற்றும் சம வாய்ப்புகளை நிலைநிறுத்தவும், பாதிப்பிற்குள்ளாகக்கூடிய மாணவர்களை பாதுகாக்கவும், மாநிலத்தில், முக்கியமாக கிராம பகுதிகளில், வலுவான சுகாதார கட்டமைப்பை உறுதி செய்யவும், 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் அனைத்து மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கையை மேற்கொள்ள இச்சட்டமுன்வடிவு  கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே, அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் இந்த சட்டமுன்வடிவினை ஒருமனதாக நிறைவேற்றி தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இந்த நீட் தேர்வால் அரியலூர் மாவட்டத்தை சார்ந்த அனிதா தொடங்கி, ஏராளமான மாணவர்கள் தங்களுடைய உயிரை இழக்கக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். நேற்றைக்குக்கூட சேலம் மாவட்டத்தை சார்ந்த தனுஷ் என்ற மாணவர் நீட் தேர்வினால் உயிரிழந்திருக்கிறார்.  உயிர்க்கொல்லியாக மாறி வரும் நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு பெறுவதற்கான இந்த மசோதாவை மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக நிறைவேற்றித் தரவேண்டும்.
இந்த அரசும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் நடத்திய சட்டப் போராட்டத்தின் விளைவாக, மருத்துவ கல்விக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் இன்றைக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டினை பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு பெற்று  வரலாற்று சாதனையை நாம் புரிந்திருக்கிறோம். இந்த நீட் தேர்வு விவகாரத்திலும் அனைத்துக் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களும் முழு ஒத்துழைப்பினை நல்கி, சமூகநீதியில் வரலாறு படைத்திட துணைநிற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த புதிய சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் அதிமுக, காங்கிரஸ், பாமக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி ஆதரவுடன் நீட் தேர்வு தொடர்பான மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து பேசினர். பாஜ உறுப்பினர்கள், இந்த தீர்மானத்தை எதிர்த்து வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து சட்ட மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
 
* நீட் தொடர்ந்தால் தமிழ்நாட்டின் சுகாதார அமைப்பு மோசமாக பாதிக்கும் அபாயம்
நீட் தேர்வு மருத்துவ கல்வியின் தரத்தை மேம்படுத்துகிறது என்பது போலியானது. 2017ம் ஆண்டுக்கு முன்பிருந்தே உயர்ந்தபட்ச எண்ணிக்கையிலான மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கல்வி நிறுவனங்களை கொண்டுள்ள மாநிலங்களுள் தமிழ்நாடு ஒன்றாக இருந்தது. இந்த நிறுவனங்களில் இருந்து பட்டம் பெறுகிற மருத்துவர்கள் மற்றும் பல் மருத்துவர்கள் மிகவும் திறமை வாய்ந்தவராக இருந்தனர். மருத்துவ கல்வி படிப்புகளுக்கான சேர்க்கையை இந்திய அரசியலமைப்பின் 7வது அட்டவணையின் 3வது பட்டியலில் 25வது உள்ளீட்டில் காணலாம். எனவே, மாநில அரசானது அதை முறைப்படுத்த தகுதியுடையதாகிறது.

உயர்மட்ட குழுவின் பரிந்துரையை கவனமாக பரிசீலித்தபின்பு கிராம பகுதிகளில் வலுவான பொது சுகாதார நலனை உறுதி செய்யவும், மருத்துவ இளநிலை பட்ட படிப்புகளில் சேர்க்கைக்கான நீட் தேர்வின் தேவையை விட்டுவிடவும் மற்றும் நெறிப்படுத்துதல் மூலம் தகுதி தேர்வில் மதிப்பெண்கள் அடைப்படையில் கூறப்பட்ட படிப்புகளுக்கான சேர்க்கையை வழங்கவும் சட்டம் ஒன்றை இயற்ற அரசானது முடிவு செய்துள்ளது. அதன்படி இந்த சட்ட முன்வடிவு மேற்சொன்ன முடிவுக்கு செயல் வடிவம் கொடுக்கிறது. தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு (நீட்) இன்னும் சில ஆண்டுகளுக்கு தொடர்ந்தால் தமிழ்நாட்டின் சுகாதார அமைப்பு மிகவும் மோசமாக பாதிக்கப்படும். கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்கள் மருத்துவ படிப்புகளில் சேர முடியாமல் போகலாம். இவ்வாறு மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

Tags : NEET ,BJP , New bill passed in Assembly against NEET election: BJP walkout; Supported by all parties
× RELATED நீட் தேர்வில் முறைகேடு : நாடு முழுவதும் 50 பேர் கைது