×

கடலூரில் விவசாய நிலத்தின் மத்தியில் குப்பைக்கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்டம்..!!

கடலூர்: கடலூரில் விவசாய நிலத்தின் மத்தியில் குப்பைக்கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடலூர் நகராட்சியில் 42 வார்டுகள் உள்ளது. கடலூர் நகராட்சி முழுவதும் சேகரிக்கப்படும் குப்பைகள் கடலூர் நகர பகுதியில் பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் கொட்டப்பட்டு வந்தது. இந்த குப்பை கிடங்கால் துர்நாற்றம் வீசப்படுகிறது. பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படுகிறது என்று பொதுமக்கள் தொடர்ந்து போராடி வந்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் இருந்து குப்பை கிடங்கு அகற்றப்பட்டு கடலூர் அருகே உள்ள வெள்ளப்பாக்கம் கிராமத்தில் குப்பைக்கிடங்கு அமைக்க அரசுக்கு சொந்தமான இடம் தேர்வு செய்யப்பட்டு குப்பை கொட்டுவதற்காக நகராட்சி அதிகாரிகள் ஆயுத்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனை அறிந்த வெள்ளப்பாக்கம் கிராமமக்கள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், குப்பைக்கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளப்பாக்கம் பகுதியில் குப்பைக்கிடங்கு அமைத்தால் நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்பட்டு விவசாயம் ஒட்டுமொத்தமாக அழிவை சந்திக்கும். மேலும் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படும் என அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தகவல் அறிந்து வந்த கடலூர் வட்டாட்சியர் பலராமன் மற்றும் காவல்துறை அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் பேச்சுவார்த்தைக்கு செவிசாய்க்காத பொதுமக்கள் இத்திட்டத்தை கைவிடும் வரை போராட்டத்தை கைவிட போவதில்லை என உறுதிபட தெரிவித்துள்ளனர்.


Tags : Cuddalore , Cuddalore, agricultural land, landfill, struggle
× RELATED கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை