×

கோவையில் ரோட்டில் சிதைந்த நிலையில் சடலம் கார் விபத்தில் பெண் பலியானது உறுதியானது: உரிமையாளர் கைது

கோவை: கோவை அவினாசி ரோடு சின்னியம்பாளையம் பகுதியில் கடந்த 6ம் தேதி சிதைந்த நிலையில் பெண் சடலம் கிடந்தது. அவர் காரில் இருந்து தூக்கி வீசப்பட்டு கொலை செய்யப்பட்டதாக தகவல் பரவியதால் பீளமேடு சட்டம்-ஒழுங்கு போலீசார் விசாரித்தனர். முதலில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவரின் கார் என பதிவெண்ணை வைத்து கண்டுபிடித்தனர். ஆனால் அந்த கார் அவர் மீது மோதவில்லை என தெரியவந்தது. இதற்கிடையே வழக்கை விசாரித்து வந்த கோவை பீளமேடு இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் திருச்சி உணவு கடத்தல் பிரிவுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக நகர நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் தெய்வசிகாமணி வழக்கை விசாரித்தார்.

இந்த நிலையில் மீண்டும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் அந்த கார் கோவை பதிவெண் கொண்டது எனவும், கோவை காளப்பட்டி ரோடு நேருநகரை சேர்ந்த பைசல் (36) என்பவருடையது என்பதும் தெரியவந்தது. அவரை நேற்று முன்தினம் இரவு போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் ஓட்டி வந்த கார்தான் பெண் மீது மோதியது என உறுதியானது. அவரது சகோதரர் ஷேக் முஜிபுர் ரகுமான் (40), சவுதியில் கார் டிரைவராக உள்ளார். சமீபத்தில் கோவை வந்துள்ளார். பின்னர் பைசல், அவரது மனைவி மற்றும் ஷேக் முஜிபுர் ரகுமான் ஆகியோர் 5ம் தேதி திருச்சி சென்றுவிட்டு, நள்ளிரவில் காரில் கோவை புறப்பட்டுள்ளனர்.

காரை பைசல் ஓட்டியுள்ளார். சின்னியம்பாளையம் அருகே வந்தபோதுதான் விபத்து நடந்துள்ளது. இதையடுத்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் பைசலை கைது செய்தனர். இதற்கிடையே  கார் மோதி இறந்த பெண் கோவை மாவட்டம் அன்னூர் அருகே கரியாம்பாளையத்தை  சேர்ந்த லட்சுமி (74) என்பதும், அவிநாசி ரோட்டில் உள்ள தனியார் கல்லூரி  கேன்டீனில் பணியாற்றியதும் வேலைக்கு செல்வதற்காக சாலையைக் கடக்க முயன்றபோது விபத்தில் சிக்கி பலியானதும் தெரியவந்தது.

Tags : Coimbatore , Woman killed in car accident in Coimbatore: Owner arrested
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...