×

தனியார் மயம் திட்டத்தின் கீழ் நடவடிக்கை: திருச்சி விமான நிலையத்துடன் திருப்பதி ஏர்போர்ட் இணைப்பு

திருமலை: திருச்சி விமான நிலையத்துடன் தனியார் மயமாக்கும் திட்டத்தில் திருப்பதி விமான நிலையத்தை ஒன்றிய அரசு இணைத்துள்ளது.  திருப்பதி விமான நிலையத்தை தனியார் மயமாக்க ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது.  நாடு முழுவதும் தனியார் மயமாக்கப்படும் 13 விமான நிலையங்களில் திருப்பதி விமான நிலையமும் ஒன்றாக உள்ளது. ஏழுமலையானை தரிசனம் செய்ய  லட்சக்கணக்கில் பக்தர்கள் திருப்பதிக்கு வருகின்றனர். பக்தர்கள் பலர் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும்  வெளிநாடுகளில் இருந்தும் திருப்பதிக்கு விமானம் மூலம் வருகின்றனர். ஆன்மீக மையமாக உள்ள திருப்பதியில் உள்ள விமான நிலையத்தை தனியார் மயமாக்குவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.  

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய வருபவர்களில் பெரும்பாலானோர் ரயில் பயணத்தையும் விமான பயணத்தையும் விரும்புகின்றனர். சமீபத்தில் விமானம் மூலம் திருப்பதிக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இதற்கு காரணம் ஐதராபாத், விஜயவாடா, சென்னை மற்றும் பெங்களூரில் இருந்து குறுகிய நேரத்தில் திருப்பதியை அடையலாம் என்பதே. இந்தநிலையில், லாபத்துடன் இயங்கும் விமான நிலையத்துடன் நஷ்டத்தில் இயங்கும் சிறிய  விமான நிலையங்களை  ஒன்றிய அரசு  இணைத்துள்ளது. அதன்படி 22 கோடி வருவாயுடன் லாபத்தில் உள்ள திருச்சி விமான நிலையத்துடன் 35 கோடி நஷ்டத்தில் உள்ள திருப்பதி விமான நிலையம் இணைக்கப்பட்டுள்ளது.

சித்தூர் மாவட்டம் ரேணிகுண்டாவில் அமைந்துள்ள இந்த விமான நிலையம் தொடக்கத்தில் இருந்தே  திருப்பதி விமான நிலையம் என்று அழைக்கப்படுகிறது.  1993ல் அப்போதைய பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் மூலம் 11 கோடி செலவில் புதிய விமான முனையம் அமைக்கப்பட்டது. நவீனமயமாக்கப்பட்ட விமான நிலையத்தை பிரதமர் வாஜ்பாய் திறந்து வைத்தார்.  2015ல், திருப்பதி விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து வழங்கப்பட்டது. அதேஆண்டு, பிரதமர் நரேந்திர மோடி மற்றொரு புதிய முனையத்தை திறந்து வைத்தார். ஐதராபாத், டெல்லி, விஜயவாடா மற்றும் விசாகப்பட்டினம் செல்லும் விமானங்கள் மட்டுமே தற்போதைக்கு உள்ளன.  சர்வதேச விமான நிலையமாக தரத்தை உயர்த்த ரன்வே 3,810 மீட்டருக்கு 12,500 அடி விரிவுபடுத்த வேண்டியுள்ளது.

இதற்காக மாநில அரசு 712 ஏக்கர் நிலத்தை விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைத்துள்ளது. 200 கோடி செலவில் ஓடுபாதை விரிவாக்கம் மற்றும் பார்க்கிங் பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விமான நிலையங்களை தனியார்மயமாக்கும் செயல்பாட்டில் சிறிய விமான நிலையங்கள் முதல் முறையாக பெரிய விமான நிலையங்களுடன் இணைக்கப்படுகின்றன.  நாட்டின் 13 விமான நிலையங்களை தனியார்மயமாக்குவதற்கு இந்திய விமான நிலைய ஆணையம் அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. விரைவில் திருப்பதி விமான நிலையத்தில் இருந்து சர்வதேச விமான சேவை தொடங்கப்படவுள்ள நிலையில், விமான நிலையத்தை தனியார் மயமாக்கும் திட்டம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Tiruthi ,Tiruchi Airport , Tirupati Airport, Link
× RELATED ஜனநாயகத்திற்கும்,...