×

வருசநாடு பகுதியில் பாலிதீன், பிளாஸ்டிக் கழிவுகளால் மூல வைகையாற்றுக்கு பாதிப்பு: அதிகாரிகளின் நடவடிக்கை அவசியம்

வருசநாடு: கடமலை-மயிலை ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் உள்ள கடைகளில் பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடும், விற்பனையும் அதிகரித்துள்ளது. மேலும், இந்த பாலிதீன் கழிவுகளால், மூல வைகை ஆறு பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது என இயற்கை ஆர்வலர்கள் கூறுகின்றனர். கடமலை-மயிலை ஒன்றியம் கடமலைக்குண்டு, வருசநாடு, மயிலாடும்பாறை உள்ளிட்ட பெரும்பாலான கிராமங்களில் அரசின் தடையை மீறி கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடமலை-மயிலை ஒன்றிய அதிகாரிகள் கிராமங்களில் செயல்பட்டு வரும் கடைகளை சோதனை செய்து பிளாஸ்டிக் பயன்படுத்தும் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர். அதன்பின்னர் அதிகாரிகள் கடைகளில் சோதனை மேற்கொள்ளவில்லை. எனவே, கடைகளில் டம்ளர், தண்ணீர் பாக்கெட், பைகள் என பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இவ்வாறு கடைகளில் வழங்கப்படும் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு முடிந்த பின்னர் பொதுமக்கள் அதனை சாக்கடை வடிகால்களில் தூக்கி எறிகின்றனர்.

இதனால் பிளாஸ்டிக் பைகள் சாக்கடை வடிகால்களை அடைத்து கொள்வதுடன் கழிவுநீருடன் சென்று மூல வைகை ஆற்றில் கலந்து விடுகிறது. இதனால் கடமலைக்குண்டு, வருசநாடு, மயிலாடும்பாறை ஆகிய கிராமங்களில் மூல வைகை ஆற்றில் பிளாஸ்டிக் டம்ளர்கள், பைகள் அதிக அளவில் குவிந்து காணப்படுகிறது. மேலும், தற்போது தடை காரணமாக பிளாஸ்டிக் டம்ளர், தண்ணீர் பாக்கெட் உள்ளிட்டவற்றை அதிக விலைக்கு கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கடமலை-மயிலை ஒன்றியத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து இயற்கை ஆர்வலர்கள் கூறுகையில், ‘பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டால் நீர், நிலம், காற்று என அனைத்திற்கும் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. அதனால் தான், அரசு அதற்கு தடை விதித்துள்ளது. ஆனால், கடமலை-மயிலை ஒன்றியம் கடமலைக்குண்டு, வருசநாடு, மயிலாடும்பாறை உள்ளிட்ட கிராமங்களில் உள்ள கடைகளில் டம்ளர், தண்ணீர் பாக்கெட், பாலிதீன் பைகள் என பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருகிறது.இதனால், அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கிறது. குறிப்பாக, பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக்
பொருட்களின் கழிவுகள் மூல வைகை ஆற்றில் கலப்பதால் பெரிய அளவில் விவசாயம் பாதிக்கப்படுகிறது. எனவே, இப்பகுதிகளில் சம்பந்தபட்ட அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

பாலூத்து ஓடையையும் பாருங்க
கடமலைக்குண்டு கிராமத்தின் வழியாக பாலூத்து ஓடை அமைந்துள்ளது. கடமலைக்குண்டு பகுதியில் கனமழை பெய்யும் நேரங்களில் பாலூத்து ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக கடமலைக்குண்டு பகுதியில் போதிய அளவில் மழை இல்லை. இதனால், ஓடையில் செடி, மரங்கள் அதிக அளவில வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. தவிர கடமலைக்குண்டு கிராமத்தில் இருந்து ஊராட்சி நிர்வாகம் மூலம் அகற்றப்படும் குப்பைக்கழிவுகள் இங்கு தான் கொட்டப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் மழைநீர் செல்ல தடை ஏற்படுகிறது. மேலும், ஓடையின் சில பகுதிகளை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனர். இதனால் ஓடையின் பரப்பளவு சில இடங்களில் குறுகலாக உள்ளது. எனவே, இந்த ஓடையை முறையாக ஆய்வு செய்து சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags : Impact on raw materials by polythene and plastic waste in Varusanadu area: Action of the authorities is required
× RELATED மதுரை வாலாந்தூர் கோயில் விழாவில்...