×

செங்கை, காஞ்சி மாவட்டங்களில் விமரிசையாக நடந்த விநாயகர் சதுர்த்தி விழா

செங்கல்பட்டு: செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகம் எதிரில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சக்தி விநாயகர் கோயிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் அனுமதியின்றி கோயில் வளாகத்தில் விநாயகர் சதுர்த்தி நேற்று  மிக விமரிசையாக நடந்தது. காலை 6 மணிக்கு மூலவர் மற்றும் உற்சவருக்கு பால், தயிர், தேன், மஞ்சள், குங்குமம், விபூதி, பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்பட 18 வித பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது.
காலையில் மூலவர் சக்தி விநாயகர் வெள்ளிக் கவசத்திலும், மாலையில் சந்தன காப்பு அலங்காரத்திலும் அருள்பாலித்தார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருக்கோயில் முன்பு அலங்கார முகப்பு பந்தல் போடப்பட்டு வண்ண மின்விளக்குகளால் அலங்காரமும் செய்யப்பட்டது.

இதேபோன்று செங்கல்பட்டு அருகே ஆத்தூர் முத்தீஸ்வரர், பாலூர் பால பதங்கீஸ்வரர் ஆகிய கோயில்களில் உள்ள விநாயகர் சந்நிதிகளிலும் பக்தர்களுக்கு அனுமதியின்றி சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தன. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை காஞ்சிபுரம் இணை ஆணையர் பொ.ஜெயராமன், கோயில் நிர்வாக அதிகாரி சோ.செந்தில்குமார் ஆகியோர் செய்தனர். செங்கல்பட்டு, மறைமலைநகர், சிங்கபெருமாள்கோயில், பொன்விளைந்த களத்தூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள விநாயகர் கோயில்களில், பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். வீடுகளில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டனர்.

காஞ்சிபுரம்: ஆண்டுதோறும் காஞ்சி காமாட்சியம்மன் சன்னதி தெருவில் உள்ள ஏலேல சிங்க விநாயகர் கோயிலில் பணத்தை மாலையாக அணிவித்து விநாயகர் சதுர்த்தி விமரிசையாக கொண்டாடப்படும். ஆனால் இந்தாண்டு பக்தர்களுக்கு அனுமதியின்றி சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தன. காஞ்சிபுரம் - வந்தவாசி நெடுஞ்சாலை உக்கம்பெரும்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள  நட்சத்திர விருட்ச விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி நட்சத்திர விருட்ச விநாயகருக்கு பல்வேறு பொருட்களால் கலச அபிஷேகமும். சிறப்பு அலங்காரமும். 27 நட்சத்திர அதிதேவதைகள், ராகு, கேது, சனீஸ்வர பகவான்களுக்கு சிறப்பு அபிஷேகமும் நடந்தது.  தொடர்ந்து இலட்சார்ச்சனை நடத்தப்பட்டது.

சிங்கபெருமாள் கோயில் தெரு செல்வ விநாயகர், டிகே நம்பி தெரு செல்வ விநாயகர், காஞ்சிபுரம் காமாட்சியம்மன், ஏகாம்பரநாதர், வரதராஜ பெருமாள் கோயில் உள்பட காஞ்சிபுரத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட கோயில்களில் விநாயகருக்கு எருக்கம்பூ மாலை அணிவித்து, சுண்டல், பழங்கள், கரும்பு படையலிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. உத்திரமேரூர், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர்  உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள விநாயகர் கோயில்களில் விநாயகர் சதுர்த்தி விழா எளிமையாக கொண்டாடப்பட்டது.  வீடுகளில் விநாயகர் வழிபாடு செய்ய காஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட், நேரு மார்க்கெட் மற்றும் தேரடி பகுதிகளில் ஏராளமானோர் திரண்டு வந்து விநாயகர் சிலை, பூ, பழங்கள், எருக்கம்பூ மாலை, அருகம்புல் உள்பட பொருட்கள் வாங்கி சென்றனர்.

திருப்போரூர்: விநாயகர் சதுர்த்தியையொட்டி நேற்று காலை முதலே திருப்போரூர், நாவலூர், படூர், கேளம்பாக்கம், கோவளம், மாம்பாக்கம், மேலக்கோட்டையூர் ஆகிய பகுதிகளில் விநாயகர் சிலை விற்பனை சூடு பிடித்தது. ஏராளமானோர் மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வாங்கி வீடுகளுக்கு கொண்டு சென்று எருக்கம்பூ மாலை அணிவித்து, சுண்டல், கொழுக்கட்டை படைத்து வழிபட்டனர். இதன் காரணமாக பூ, பழம், விநாயகர் குடை போன்ற பொருட்களின் விற்பனை சூடு பிடித்தது. திருப்போரூர் தங்கப்பிள்ளையார் ஆலயத்தில் சந்தனக்காப்பு அபிஷேகம் நடந்தது. அதேபோல், 400 ஆண்டுகள் பழமையான வேம்படி விநாயகர் கோயில், வினை தீர்த்த விநாயகர், சரவணப்பொய்கையில் அமைந்துள்ள கங்கை விநாயகர், வணிகர் தெரு அருள்சக்தி விநாயகர் ஆகிய ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. காலவாக்கம் கிராமத்தில் உள்ள விநாயகருக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. அதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

அனுமதியின்றி சிலை
கொரோனா ஊரடங்கின் காரணமாக தமிழகம் முழுவதும் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க தடை விதித்து அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், திருப்போரூர் இந்து முன்னணி சார்பில் தண்டலம் சந்திப்பு அருகே 2 அடி உயர விநாயகர் சிலையை அனுமதியின்றி வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. இதையறிந்ததும் திருப்போரூர் இன்ஸ்பெக்டர் கண்ணையன், எஸ்ஐ அசோக சக்கரவர்த்தி மற்றும் போலீசார் அங்கு சென்று விநாயகர் சிலையை அகற்ற முயற்சித்தனர். இதற்கு இந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் பின்னர், அந்த விநாயகர் சிலையை தாங்களே எடுத்துச் செல்வதாக கூறி காரில் வைத்து கொண்டு புறப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Vinayakar Samurdhi Festival ,Kandhi , Chengai, Kanchi, Ganesha Chaturthi festival, idol without permission
× RELATED காணி பழங்குடி மகளிர் குழுவிற்கு ரூ.25...