×

மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.23 லட்சம் மோசடி ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டின் முன்பு பட்டதாரி வாலிபர் தீக்குளித்து தற்கொலை: பொதுமக்கள் முன்னிலையில் நடந்ததால் சூளைமேட்டில் பரபரப்பு

சென்னை: சென்னை சூளைமேடு கில் நகர் 2வது தெருவை சேர்ந்தவர் பழனிகுமார்(57). ரியல் எஸ்டேட் அதிபரான இவர், பனையூரில் பெரிய அளவில் ரியல் எஸ்டேட் செய்து வருகிறார். இவரது வீட்டின் முன்பு வாலிபர் ஒருவர் நேற்று முன்தினம் இரவு முதல் பழனி குமாரை சந்திக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அவரை சந்திக்க முடியவில்லை. இந்நிலையில் நேற்று காலை பழனிகுமார் அருகில் உள்ள கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அந்த வாலிபர், பழனிகுமாரிடம் வேலைக்கு கொடுத்த பணத்தை கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த வாலிபர் திடீரென அவர் கொண்டு வந்த பெட்ரோலை உடலில் ஊற்றி கண்ணிமைக்கும் நேரத்தில் தீ வைத்து கொளுத்தி கொண்டார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத அருகில் இருந்த பொதுமக்கள் தீயால் வலி தங்க முடியாமல் அங்கும் இங்கும் அலறி துடித்த வாலிபரை மீட்க முயன்றனர். ஆனால் தீயின் காரணமாக அவரை உடனே மீட்க முடியவில்லை. பிறகு கடும் போராட்டத்திற்கு பிறகு வாலிபர் மீது இருந்து தீயை பொதுமக்கள் அனைத்து சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 93 விழுக்காடு தீக்காயங்களுடன் வாலிபர் உயிருக்கு போராடி அவர் சிறிது நேரத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இதுகுறித்து சூளைமேடு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், தீ குளித்தவர் தேனி மாவட்டத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன்(30) என்றும், பட்டதாரியான இவர் அரசு வேலைக்காக சென்னைக்கு வந்துள்ளார்.

அப்போதுதான், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் பழனிகுமாரின் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது பழனிகுமார் எனக்கு மின்வாரியத்தில் அதிகாரிகள் பலரைத் தெரியும் என்றும் உனக்கு வேலை வாங்கி தருகிறேன் என பாலகிருஷ்ணனிடம் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. அதற்காக பாலகிருஷ்ணனிடம் ரூ.23 லட்சம் பணம் பெற்றதாக தெரிகிறது. பாலகிருஷ்ணன் பல இடங்களில் கடன் வாங்கி அந்த பணத்தை ரியல் எஸ்டேட் அதிபர் பழனிகுமாரிடம் கொடுத்துள்ளார். ஆனால் அவர் சொன்ன படி வேலை வாங்கி தரவில்லை.  இதனால் மனமுடைந்த பாலகிருஷ்ணன் வேலைக்காக கொடுத்த ரூ.23 லட்சம் பணத்தை திரும்பக்  கேட்டு வந்துள்ளார். ஆனால் ரியல் எஸ்டேட் அதிகாரி பழனிகுமார் வாங்கிய பணத்தை கொடுக்காமல் இழுத்து அடித்து வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அதில் 10 லட்சத்திற்காக ஒரு செக் கொடுத்துள்ளார்.

அதை வங்கியில் செலுத்தியபோது, பழனிகுமார் கணக்கில் பணம் இல்லை என்று திரும்பி விட்டது. இதனால் நேற்று முன்தினம் செக்கை எடுத்துக் கொண்டு தேனியில் இருந்து பாலகிருஷ்ணன், பழனிகுமாரை சந்தித்து பணத்தை வாங்க வந்துள்ளார். ஆனால் பழனிகுமார் பணம் கொடுத்த பாலகிருஷ்ணனை சந்திக்காமல் தவிர்த்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பாலகிருஷ்ணன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது.

 இதைதொடர்ந்து தற்கொலைக்கு காரணமான ரியல் எஸ்டேட் அதிபர் பழனிகுமார் மீது தற்கொலைக்கு தூண்டியதாக சூளைமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் மோசடி தொடர்பாக ரியல் எஸ்டேட் அதிபரிடம் விசாரிக்கின்றனர். இறந்த பாலகிருஷ்ணன் குறித்து அவரது பெற்றோருக்கு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் அங்கு  பதற்றம் நிலவியது.

Tags : Electricity, fraud, real estate tycoon, graduate, suicide:
× RELATED கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து...