×

ஓசியில் செய்வதால் பக்தர்கள் டிமிக்கி சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவுக்கு கட்டணம்: தேவசம் போர்டு ஆலோசனை

திருவனந்தபுரம்: சபரிமலை  ஐயப்பன் கோயிலில் தரிசனத்திற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதி கடந்த  10 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. பெரும்பாலும் தமிழ்நாடு, ஆந்திரா,  கர்நாடகா உள்பட வெளிமாநில பக்தர்கள்தான் இந்த வசதியை அதிகமாக பயன்படுத்தி  வருகின்றனர்.
இந்நிலையில், கொரோனாவுக்கு பின்னர்  ஆன்லைன் முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. சில மாதங்களாக மாத பூஜை மற்றும் ஓணம் பண்டிகைக்கு நடை  திறக்கப்பட்டபோது தினமும் 15 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு  அனுமதிக்கப்பட்டனர்.

அதேநேரம், முன்பதிவு செய்யும் பக்தர்களில் பெரும்பாலானோர்  தரிசனத்திற்கு வருவதில்லை. கடந்த மாத பூஜையின்போது முன்பதிவு செய்த 6,772  பக்தர்கள் தரிசனத்திற்கு வரவில்லை. இதனால், மற்ற பக்தர்களுக்கு  கிடைக்க வேண்டிய வாய்ப்புகளும் கிடைக்காமல் போகிறது. ஆன்லைன் முன்பதிவை இலவசமாக செய்ய அனுமதிப்பதே இதற்கு காரணம் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு கருதுகிறது. எனவே, ஆன்லைன்  முன்பதிவுக்கு கட்டணம் வசூலிக்கலாமா? என்பது குறித்து அதன் போர்டு ஆலோசித்து வருகிறது.

வந்தால் பக்தர்களுக்கு வராவிட்டால் சாமிக்கு
தேவசம் போர்டு தலைவர் வாசு கூறுகையில், ‘‘ஆன்லைன் முன்பதிவுக்கு எவ்வளவு கட்டணத்தை நிர்ணயிப்பது என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. முன்பதிவு செய்து தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு,  அந்த கட்டணம் திருப்பி கொடுக்கப்படும். தரிசனத்திற்கு வரவில்லை என்றால் அந்த கட்டணம் கோயிலுக்கு சென்று விடும். வரும் மண்டலம் காலம் முதல் இந்த  முறை அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது,’’ என்றார்.

Tags : Timikki ,Sabarimala ,OC , Devotees, Sabarimala, Online Booking, Fees
× RELATED சித்திரை விஷு சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு