ஏலகிரி மலையில் நள்ளிரவு துணிகரம்; தனியார் பங்களாவில் 3 சந்தன மரங்கள் வெட்டி கடத்தல்: சிசிடிவி கேமரா இணைப்பை துண்டித்து மர்மநபர்கள் கைவரிசை

ஜோலார்பேட்டை: ஏலகிரி மலையில் தனியார் பங்களாவில் நள்ளிரவு சிசிடிவி கேமரா இணைப்பைத் துண்டித்துவிட்டு 3 சந்தன மரங்களை மர்ம நபர்கள் வெட்டி கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் இங்கு பல்வேறு தரப்பினரும் வந்து செல்வதால் தங்கும் விடுதிகள், ரிசார்ட்டுகள், பங்களாக்கள் என உள்ளன.

மேலும் தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் என பலரும் இங்கு நிலங்களை வாங்கியும், அவர்களுக்கு சொந்தமான இடங்களில் பங்களாக்கள், ரிசார்ட்டுகள் போன்றவைகளை கட்டியும் வாடகைக்கும், லீசுக்கும் விட்டு வருகின்றனர். இந்நிலையில், இங்குள்ள கொட்டையூர் பகுதியில் சென்னை பகுதியை சேர்ந்த ஜெயகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான பங்களா ஒன்று உள்ளது. மேலும் இங்கு பல வருடங்களாக அவர் வசித்து வரும் நிலையில் கடந்த மாதம் 30ம் தேதி இரவு மழை பெய்து கொண்டிருந்தது.

அப்போது வீட்டின் கதவை பூட்டி விட்டு ஜெயகிருஷ்ணன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அனைவரும் உள்ளே தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது மர்ம நபர்கள் சிலர் ஜெயகிருஷ்ணனின் பங்களாவிற்குள் நுழைந்து நுழைவாயிலில் இருந்த சிசிடிவி கேமரா இணைப்பை துண்டித்துள்ளனர். பின்னர், பங்களாவில் பல்வேறு உயர்ரக மரங்களை வளர்த்து வந்த நிலையில் அங்கிருந்த 3 சந்தன மரங்களை மர்ம நபர்கள் வெட்டி கடத்திச் சென்றுள்ளனர். இதுகுறித்து ஜெயகிருஷ்ணன் ஏலகிரி மலை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் நேற்றுமுன்தினம் வழக்கு பதிவு செய்து தனியார் பங்களாவில் இருந்த சந்தன மரங்களை வெட்டிச் சென்ற மர்மநபர்களை போலீசார் விசாரணை நடத்தி தேடி வருகின்றனர். பங்களாவிற்குள் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா இணைப்பைத் துண்டித்துவிட்டு சந்தன மரங்களை மர்ம நபர்கள் வெட்டி கடத்தி சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: