×

தமிழகத்தில் காலியாக இருக்கும் 2 மாநிலங்களவை எம்பி பதவிக்கு அடுத்த மாதம் 4ம் தேதி தேர்தல்: மேற்கு வங்கம் உட்பட 5 மாநிலங்களிலும் நடக்கிறது

புதுடெல்லி: தமிழகத்தில் காலியாக உள்ள இரண்டு மாநிலங்களவை எம்பி பதவிகளுக்கு அக்டோபர் 4ம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை தலைமை தலைமை தேர்தல் ஆணையம் வௌியிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2020ம் ஆண்டு 6 மாநிலங்களவை எம்பி பதவிகள் காலியாக இருந்தன. இதில், திமுக, அதிமுக.வுக்கு தலா மூன்று இடங்கள் கிடைத்தன. அதிமுக தரப்பில் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், கூட்டணி கட்சியான தமாகா.வின் தலைவர் ஜி.கே.வாசனுகஅக இந்த பதவிகள் வழங்கப்பட்டன.

கடந்த மே மாதம் முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி தொகுதியில் கே.பி.முனுசாமியும், தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தொகுதியில் வைத்திலிங்கமும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதையடுத்து, இவர்கள் தங்களின் எம்பி பதவியை கடந்த ஏப்ரல் 10ம் தேதி ராஜினாமா செய்தனர். அதேபோல், 2019ம் ஆண்டு அதிமுக மாநிலங்களவை எம்பி.யாக தேர்வு செய்யப்பட்ட முகமது ஜான் இறந்தார். இதனால், தமிழகத்தில் மொத்தம் மூன்று மாநிலங்களவை எம்பி பதவிகள் காலியாக இருந்தன.

இந்நிலையில், காலியாக உள்ள இந்த பதவிகளுக்கு மற்ற மாநிலங்களில் நடத்தியபோது, தமிழகத்திலும் தனித்தனியாக நடத்தும்படி தலைமை தேர்தல் ஆணையத்திடம் திமுக முறையிட்டது. அதன்படி, முகமது ஜானால் காலியான பதவிக்கு மட்டும் கடந்த மாதம் 17ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், திமுக வேட்பாளர் முகமது அப்துல்லா போட்டியின்றி கடந்த 4ம் தேதி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். காலியாக உள்ள மற்ற 2 இடங்களுக்கான தேர்தல், அக்டோபர் 4ம் தேதி நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.

அதேபோல், மேற்கு வங்கம், அசாம், மகாராஷ்டிரா, புதுச்சேரி, மத்திய பிரதேச மாநிலங்களில் காலியாக உள்ள தலா ஒரு இடங்களுக்கான தேர்தலும் அதே தேதியில் நடத்தப்பட உள்ளது. புதுச்சேரியில் அதிமுக சார்பில் மாநிலங்களவை எம்பி.யாக உள்ள கோகுலகிருஷ்ணனின் பதவிக் காலம், அக்டோபர் 6ம் தேதி முடிகிறது. அதனால், இந்த இடத்துக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் அதிமுக.வுக்கு குறைந்த எண்ணிக்கையிலேயே எம்எல்ஏ.க்கள் பலம் இருப்பதால், திமுக வேட்பாளர்களுக்கான வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

* சட்ட அமைச்சகம் அரசாணை
தமிழகத்தில் கடந்த மாதம் நடந்த ஒரு இடத்துக்கான மாநிலங்களவை எம்பி பதவி தேர்தலில், திமுக வேட்பாளர் முகமது அப்துல்லா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், ஒன்றிய சட்ட அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிவிக்கையில், ‘மாநிலங்களவை தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக வேட்பாளர் முகமது அப்துல்லா எம்பி.யாக சட்ட விதிகளுக்கு உட்பட்டு தேர்வு செய்யப்பட்டர்,’ என்று கூறி, அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் நடக்க உள்ள மாநிலங்களவை தேர்தலுக்கான அட்டவணை
தேர்தல் நாள்    அக்.4
மனு தாக்கல் துவக்கம்    செப்.15
மனு தாக்கல் முடிவு    செப்.22
மனு பரிசீலனை    செப்.23
மனு வாபஸ்
கடைசி நாள்    செப்.27
* அக்டோபர் 4ம் தேதி காலை 9 மணிக்கு தொடங்கி, மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.
* அன்றைய தினமே மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

Tags : Tamil Nadu ,West Bengal , Elections for 2 vacant MP posts in Tamil Nadu will be held on the 4th of next month in 5 states including West Bengal
× RELATED தமிழகத்தில் 5 நாட்களுக்கு...