×

இரண்டரை மாதத்தில் 9,195 பேர் சாவு இறந்தவர்களில் 90% பேர் தடுப்பூசி போடவில்லை: கேரள சுகாதாரத் துறை தகவல்

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த இரண்டரை மாதத்தில் கொரோனா பாதித்து 9,195 பேர் இறந்துள்ளனர். இவர்களில் 90 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் என்று சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தியாவிலேயே கடந்த பல வாரங்களாக கொரோனா பரவல் மிக அதிகம் உள்ள மாநிலங்களில் கேரளா முதல் இடத்தில் உள்ளது. நாட்டின் தினசரி பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையில் 70 சதவீதம் கேரளாவில்தான் பதிவாகி வருகிறது. இம்மாநிலத்தில் தினமும் சராசரியாக 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நோய் பரவி வந்தது. இரு தினங்களுக்கு முன்தான் இந்த எண்ணிக்கை சற்று குறைந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் 30 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இதுவரை மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்தை தாண்டியது. கேரளாவில் கடந்த இரண்டரை மாதத்தில் கொரோனா பாதித்து இறந்தவர்களில் 90 சதவீதத்திற்கு மேல், ஒரு டோஸ் தடுப்பூசி கூட செலுத்தி கொள்ளாதவர்கள் என்று சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது. அந்த வகையில், கடந்த ஜூன் 18 முதல் செப்டம்பர் 3ம் தேதி வரை கொரோனா பாதித்து 9,195 பேர் மரணமடைந்து உள்ளனர். இதில் 905 பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்தி உள்ளனர். இது 9.87 சதவீதமாகும். மொத்தமுள்ள இறப்பு எண்ணிக்கையில் 6,200 பேர் ஏற்கனவே இதயம், சிறுநீரகம், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர். இது, 67.43 சதவீதமாகும். இதையடுத்து, மாநிலத்தில் தடுப்பூசி செலுத்தும் பணியை மேலும் தீவிரப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

Tags : Kerala Health Department , 90% of 9,195 deaths in two and a half months not vaccinated: Kerala Health Department
× RELATED கேரளாவில் இன்று புதிதாக 1,239 பேருக்கு கொரோனா தொற்று..!