×

பாஜ ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 7 ஆண்டுகளில் கட்சி தாவல் அதிகரிப்பு: அதிகம் இழந்த கட்சி காங்கிரஸ்

புதுடெல்லி: நாட்டில் பாஜ ஆட்சி அமைந்த பிறகு, கடந்த 7 ஆண்டுகளில் எம்பி.க்கள், எம்எல்ஏ.க்கள், வேட்பாளர்கள் மற்றும் தலைவர்களின் கட்சித்  தாவல் அதிகமாகி இருக்கிறது. இந்த ஆண்டுகளில் நடந்த தேர்தல்களின் போது காங்கிரசை சேர்ந்த 222 வேட்பாளர்கள் மாற்றுக் கட்சிகளில் இணைந்துள்ளனர். இதில், பாஜ அதிகம் லாபம் அடைந்துள்ளது. ஒன்றிய அரசாக பாஜ பதவியேற்றதில் இருந்து காங்கிரசை குறிவைத்து ஒவ்வொரு மாநிலத்திலும் பிளவுப்படுத்தி வருகிறது. மேலும், சட்டமன்ற தேர்தல் நேரத்திலும், மக்களவை தேர்தல் சமயத்திலும் காங்கிரஸ் வேட்பாளர்கள், முக்கிய தலைவர்களை தங்கள் கட்சிக்கு இழுத்துக் கொண்டது. இதனால், காங்கிரஸ் கட்சி பல தலைவர்களை இழந்துள்ளது.

இந்நிலையில், தேசிய தேர்தல் கண்காணிப்பு மற்றும் ஜனநாயக சீர்திருத்த அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வில் கூறியிருப்பதாவது: கடந்த 2014 முதல் 2021ம் ஆண்டு வரையில் நடந்த தேர்தல்களின்போது நாட்டில் மிகவும் அதிகப்பட்சமாக காங்கிரசை சேர்ந்த 222 வேட்பாளர்கள் மற்ற கட்சிகளுக்கு சென்று இணைந்துள்ளனர். அதேபோல், இதே காலக்கட்டத்தில் இக்கட்சியை சேர்ந்த 177 எம்பி.க்கள், எம்எல்ஏ.க்கள் கட்சி தாவியுள்ளனர். அதே போன்று பாஜ.வில் இருந்து 111 வேட்பாளர்கள் கட்சி தாவியுள்ளனர். மேலும், இக்கட்சியை சேர்ந்த 33 எம்பி மற்றும் எம்எல்ஏ.க்களும் மாற்று கட்சிகளில் சேர்ந்துள்ளனர்.

காங்கிரசில் இருந்து கட்சி தாவியவர்களில் பெரும்பாலோர், பாஜ.வுக்குதான் சென்றுள்ளனர். பாஜ.வில் மொத்தம் 253 மாற்றுக் கட்சியினர் இணைந்துள்ளனர். இதில், 173 எம்பி, எம்எல்ஏ.க்கள் தங்கள் கட்சியில் இருந்து ராஜினாமா செய்து பாஜ.வில் ஐக்கியமானவர்கள். இதனால், பாஜ அதிக லாபம் அடைந்த கட்சியாக உள்ளது. காங்கிரசை பொருத்தவரையில் கடந்த 7 ஆண்டுகளில் 399 தலைவர்கள் கட்சியிலிருந்து விலகி இதர கட்சியில் இணைந்துள்ளனர். அதேபோல், 115 பேர் மாற்று கட்சிகளில் இருந்து காங்கிரசில் இணைந்துள்ளனர். இதில், 61 எம்பி., மற்றும் எம்எல்ஏக்கள் அடங்குவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தேசிய தேர்தல் கண்காணிப்பு மற்றும் ஜனநாயக சீர்த்திருத்த அமைப்பின் அறிக்கையில் மேலும் இடம் பெற்றுள்ள புள்ளி விவரங்கள் வருமாறு:
* மொத்தம் 1,133 வேட்பாளர்களின் தேர்தல் விண்ணப்பத்தை வைத்தும், 500 எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் கட்சி மாறி, மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் போட்டியிட்ட மனுக்களை வைத்தும் இந்த ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
* காங்கிரசுக்கு அடுத்தபடியாக மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து கணிசமான வேட்பாளர்கள் மாற்றுக் கட்சிக்கு தாவியுள்ளனர். இதில், 153 பேரில் 20 பேர் எம்பி., எம்எல்ஏக்கள். அதேபோல், மாற்று கட்சிகளில் இருந்து 65 பேர் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்துள்ளனர்.
* சமாஜ்வாடி கட்சி 60 பேரை இழந்துள்ளது.
* திரிணாமுல் காங்கிரஸ் 31 பேரை இழந்துள்ளது. இதில், 26 பேர் எம்பி., எம்எல்ஏக்கள். மாற்று கட்சிகளில் இருந்து 23 பேர் இக்கட்சிக்கு தாவியுள்ளனர்.
* ஐக்கிய ஜனதா தள கட்சி 59 பேரை இழந்துள்ளது. இதில் 12 பேர் எம்பி., எம்எல்ஏக்கள். இந்த கட்சியிலும் மாற்று கட்சிகளை சேர்ந்த 23 பேர் இணைந்துள்ளனர். இதில், 12 பேர் மக்கள் பிரதிநிதிகள்.


Tags : BJP ,Congress , Party tab increase in last 7 years after BJP came to power: The party that lost the most is Congress
× RELATED என்ன விலை கொடுத்தாவது ஆட்சியைப்...