×

சொன்னால் சொன்னது தான்... லோக்பால் அமைப்பு திட்டவட்டம்

புதுடெல்லி: ‘லோக்பால் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடோ, மறுசீராய்வோ செய்யும்படி கேட்கவோ முடியாது,’ என்று அந்த அமைப்பு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா மசோதா 2013ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஊழலுக்கு எதிரான இந்த சட்ட அமைப்பு சுய அதிகாரம் கொண்டதாகும். இந்த அமைப்புகள் பிரதமரையும் விசாரணை நடத்தும் அளவுக்கு அதிகாரமும், சுதந்திரமும் பெற்றுள்ளது. இந்நிலையில், ஊழல் தடுப்பு புகாரில் புகார்தாரர் ஒருவர், லோக்பால் அமைப்பின் உத்தரவை மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும், மறுசீராய்வு அல்லது பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இதை விசாரித்த லோக்பால் அமைப்பின் தலைவர், ‘லோக்பால் அமர்வு வழங்கிய உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யவோ அல்லது அதை மறுசீராய்வு செய்யும்படி கேட்கவோ லோக்பால், லோக் ஆயுக்தா சட்டத்தில் அதிகாரம் அளிக்கப்படவில்லை,’ என்று தெரிவித்தார். லோக்பால் தலைவர் நீதிபதி பினாகி சந்திரகோஸ், அதன் உறுப்பினர்கள் நீதிபதி அபிலாஷா குமாரி, டி.கே.ஜெயின், ஐ.பி.கவுதம் அடங்கிய குழு,  கடந்தாண்டு அக்டோபர் மாதம் ஒன்றிய அரசிடம் அளித்துள்ள பரிந்துரையில், ‘லோக்பால், லோக் ஆயுக்தா உத்தரவை மறுசீராய்வு செய்வதற்கு வசதியாக அந்த சட்டத்தில் புதிய விதிகளை சேர்க்க வேண்டும்,’ என்று கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Lokpal , That's what I said ... Lokpal system plan
× RELATED குஜராத் மாஜி தலைமை செயலாளருக்கு லோக்பால் உறுப்பினர் பதவி