மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.276 கோடி மதிப்பிலான சொத்து மீட்பு: இந்து அறநிலையத்துறை அதிரடி நடவடிக்கை

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான பி.எஸ்.மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானம் 82.0246 கிரவுண்ட் பரப்பளவு கொண்டது. இந்த இடம் 1928ம் ஆண்டு 30 வருடங்களுக்கு விளையாட்டு மைதானமாக பயன்படுத்த குத்தகைக்கு விடப்பட்டது. 1958ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி முதல் மேலும் 21 வருடங்களுக்கு குத்தகை நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. நீட்டிப்பு செய்யப்பட்ட குத்தகை காலம் 1979ம் ஆண்டு ஜூலை 31ம் தேதியன்று முடிவடைந்து விட்டது. கோயில் மூலம் மார்க்கெட் கட்டிடம் கட்ட வெங்கடேச அக்ரஹாரம் தெருவினை ஒட்டி 5.2000 கிரவுண்ட் இடம் பி.எஸ். மேல் நிலை பள்ளியால் கோயிலுக்கு திரும்ப  ஒப்படைக்கப்பட்டது. எஞ்சிய 76.0246 கிரவுண்ட் பரப்பளவுள்ள இடம்  பி.எஸ்.மேல்நிலைப்பள்ளி விளையாட்டு திடலாக பயன்படுத்தப்பட்டு வந்தது.  

குத்தகை நீட்டிப்பு செய்யப்படாத நிலையில் மேற்படி பள்ளி நிறுவனத்தார் மாதம் ரூ.1250 சொற்ப தொகை மட்டுமே வழங்கி வந்தனர். இந்நிலையில்  பி.எஸ்.மேல்நிலைப்பள்ளி நிர்வாகம் கோயிலுக்கு கடந்த 1996ம் ஆண்டு  ஜனவரி 27ம் தேதி அனுப்பிய கடிதத்தில், தாங்கள் 1992ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி  முதல் தங்கள் சுவாதீனத்தில் இருந்த 30 கிரவுண்ட் நிலத்தை வழங்கிவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில், 30 கிரவுண்ட் நிலத்தை கடந்த 2012ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதியன்று அன்று 347 அடி நீளத்திற்கு மதிற் சுவர் கட்டி முடிக்கப்பட்டு கோயில் வசம் சுவாதீனம் எடுக்கப்பட்டது. இதற்கிடையில் பள்ளி நிர்வாகம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி  விசாரணை மேற்கொண்டு பி.எஸ்.மேல் நிலைப்பள்ளி 46 கிரவுண்ட் விளையாட்டு மைதானத்தை ஒப்படைக்கவும், நியாய வாடகை நிர்ணயத்தை மறு நிர்ணயம் செய்யவும், வாடகை நிலுவைத் தொகையில் பகுதியாக ரூ.50 லட்சத்தை  மூன்று தவணைகளாக திருக்கோயிலுக்கு வழங்கிடவும், விளையாட்டு மைதானத்தை ஏழை  பள்ளி மாணவர்கள் பயன்படும் வகையில் பயன்படுத்தவும் உத்தரவிட்டார். நீதிபதி  உத்தரவுப்படி நேற்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் முன்னிலையில்  கோயில் வசம் ஒப்படைத்தனர்.

மேலும் வாடகை நிலுவையில் ஒரு பகுதி ரூ.18  லட்சத்திற்கானகாசோலையையும் வழங்கினர். அப்போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த.வேலு ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:  28 ஆண்டுகளாக 48 கிரவுண்டிற்கு ஆண்டிற்கு ரூ.1750 மட்டுமே செலுத்தியது. மேலும் மீட்கப்பட்ட இடத்தின் தற்போதைய  சந்தை மதிப்பு ரூ.276 கோடி என்றார்.

Related Stories: