×

பெரியபட்டணத்தில் தென்னை மட்டையை தூளாக்கும் இயந்திரம் குறித்த செயல் விளக்கம்

ராமநாதபுரம்:  வேளாண் தொழில்நுட்ப மேலாண் முகமை திட்டத்தின் கீழ் தென்னை மட்டையை தூளாக்கும் இயந்திரம் குறித்த செயல் விளக்கம் திருப்புல்லாணி அருகே பெரியபட்டணம் கிராமத்தில் முகாம் நடந்தது. உழவர் பயிற்சி நிலையம் வேளாண் துணை இயக்குநர் கண்ணையா முன்னிலை வகித்தார். தென்னை மட்டையை தூளாக்கும் கருவியின் பயன்கள் பற்றி இளநிலை செயற்பொறியாளர் ராமர் செய்முறை விளக்கமளித்தார். வேளாண் பயிர் கழிவுகளான தென்னை மட்டை, தென்னை ஓலை, உரித்த மட்டை வாழை மர கழிவுகள் மற்றும் முருங்கை போன்ற மித கடினமாக மரங்களின் கழிவு மட்டைகளை அரைத்து 10 மி.மீ அளவில் தூளாக்கி தருகிறது. தூளாக்கப்பட்ட தென்னை மற்றும் இதர பயிர் கழிவுகளை நிலத்தில் மூடாக்கு இடுவதன் மூலம் 25 சதவிகிதம் நீரை சேமிக்கலாம். தென்னை மட்டையை தூளாக்கும் கருவி 18 எச்பி முதல் 55 எச்பி வரை உள்ள டிராக்டரில் பயன்படுத்தலாம்.

எலக்ட்ரிக் மோட்டாரிலும் இணைத்து பயன்படுத்தலாம். ஒரு மணி நேரத்திற்கு 4 ஆயிரம் கிலோ வரை தென்னை மட்டைகளை தூளாக்கும்திறனுடையது. தென்னை மரக்கழிவுகளை அரைத்து தூளாக்கி மண்ணில் இடுவதால் களைகள் வளர்வது 90 சதவிகிதம் கட்டுபடுத்தப்படுகிறது. தென்னை மட்டையை தூளாக்கும் இயந்திரத்தில் உள்ள பிளேடுகள் குறைந்தது 10 ஆண்டு வரை கூர்மையாக இருக்கும். இதனால் பராமரிப்பு செலவு மிக குறைவு. இயந்திரத்தின் மதிப்பானது ரூ.96 ஆயிரத்திலிருந்து ரூ.2 லட்சம் வரை உள்ளது. பெரும்பாலான விவசாயிகள் தங்களது விவசாய பயன்பாட்டிற்கு பயன்படுத்திய பின்னர் ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000 முதல் வாடகைக்கு விடுவித்து நிகர லாபம் பெற்று வருகின்றனர் என்றார்.

இக்கருவியை வாங்க விரும்பும் விவசாயிகள் ராமநாதபுரம் மாவட்ட வேளாண் பொறியியல் துறையை அணுகி மானியத்தில் பெற்று பயனடையலாம் என விவசாயிகளிடையே தெரிவித்தார். திருப்புல்லாணி வேளாண் உதவி இயக்குநர் அமர்லால், குயவன்குடி வேளாண் அறிவியல் நிலையம் இளஞ்செழியன் ஆகியோர் உடனிருந்தனர். திருப்புல்லாணி வட்டார தொழில்நுட்ப மேலாளர் பானுமதி நன்றி கூறினார். ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் மாரீஸ்வரன், திருப்புல்லாணி உதவி வேளாண் அலுவலர் தவமுருகன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : Demonstration of coconut batter crushing machine in big city
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...