×

நிபா வைரஸ் பீதியால் கொடைக்கானலில் ரம்பூட்டான் பழங்களை வாங்க மறுக்கும் சுற்றுலாப் பயணிகள்.. வியாபாரிகள் வேதனை..!!

திண்டுக்கல்: கேரளாவில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட ரம்பூட்டான் பழத்தை சாப்பிட்ட சிறுவன் உயிரிழந்த நிலையில், கொடைக்கானலில் அந்த வகை பழங்களை வாங்க சுற்றுலாப் பயணிகள் அச்சம் தெரிவித்து வருகின்றனர். கேரளாவில் சில தினங்களுக்கு முன்னர் வௌவால் கடித்த ரம்பூட்டான் பழத்தை சாப்பிட்ட சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். அவனது பெற்றோருக்கும் நிபா வைரஸ் அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கேரளாவில் ரம்பூட்டான் பழத்தை சாப்பிட அம்மாநில சுகாதாரத்துறை தடை விதித்துள்ளது.

இந்நிலையில் சுற்றுலா தளமான கொடைக்கானலில் ரம்பூட்டான் பழங்கள் விற்பனைக்கு குவிந்துள்ளன. ஆனால் கேரளாவில் ரம்பூட்டான் பழத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் ரம்பூட்டான் பழத்தை வாங்க அச்சம் தெரிவித்து வருகின்றனர். இதனால் அப்பழங்கள் தேக்கமடைந்துள்ளன. வழக்கமான நாட்களில் கிலோ ரூ.250க்கு விற்பனை செய்யப்படும் ரம்பூட்டான் பழம், தற்போது ரூ.100 என விலை குறைந்தும் அதனை வாங்க மக்கள் ஆர்வம் காட்டவில்லை என கடைக்காரர்கள் வேதனை தெரிவித்தனர்.

உதகமண்டலம் குற்றாலம் பகுதிகளில் ரம்பூட்டான் பழங்கள் அதிகளவில் விளைவிக்கப்படும் நிலையில், பழங்களை வௌவால்கள் கடிக்காத வண்ணம் மரங்களின் மீது வலைகளை விரித்து விவசாயிகள் பாதுகாத்து வருகின்றனர். ஆனால் இதுபோன்ற நடவடிக்கைகள் கேரளாவில் பின்பற்றப்படாததால் வௌவால்கள் ரம்பூட்டான் பழங்களை சாப்பிட்டு நிபா வைரஸ் உருவாகி வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.


Tags : Nipah virus, rambutan fruit, tourists
× RELATED நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச...